மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிரடித் தயாரிப்புகளைத் தொடங்கியுள்ள ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் (TMC), மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 291 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. மீதமுள்ள 3 இடங்களை (டார்ஜிலிங், குர்சியாங் மற்றும் காலிம்போங்) தனது கூட்டணி கட்சியான பாரதிய கூர்க்கா பிரஜாதந்திரிக் மோர்ச்சாவுக்கு (BGPM) ஒதுக்கியுள்ளது.
சொந்த மண்ணில் மம்தா போட்டி
திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தனது சொந்தத் தொகுதியான பவானிபூரில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக தரப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி களம் இறக்கப்பட்டுள்ளார். தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட மம்தா, "மக்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. 365 நாட்களும் அவர்களுடனேயே இருந்து என் கடமைகளைச் செய்கிறேன். பவானிபூரில் எங்கள் கட்சி பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்" என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். மேலும், இந்தத் தேர்தலில் 226-க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றி நான்காவது முறையாக ஆட்சி அமைப்போம் என்றும் அவர் முழங்கினார்.
சமூக வாரியான பிரதிநிதித்துவம்
கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி, வேட்பாளர் தேர்வில் வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம் குறித்துப் பின்வரும் விவரங்களை வெளியிட்டார். பட்டியல் சாதியினர் (SC): 78 வேட்பாளர்கள், பட்டியல் பழங்குடியினர் (ST): 17 வேட்பாளர்கள், பெண்கள்: 52 வேட்பாளர்கள், சிறுபான்மையினர்: 47 வேட்பாளர்கள்
74 பழைய முகங்களுக்கு வாய்ப்பு மறுப்பு
இந்த முறை 2021 தேர்தலை விட 74 பழைய முகங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளி வேலைவாய்ப்பு ஊழல் புகாரில் சிக்கி மத்திய முகமைகளால் கைது செய்யப்பட்ட பார்த்தா சாட்டர்ஜி, மாணிக் பட்டாச்சார்யா மற்றும் ஜிபன் கிருஷ்ணா சாஹா போன்ற முக்கியப் புள்ளிகள் நீக்கப்பட்டுள்ளனர். முன்னாள் மேயர் சோவன் சாட்டர்ஜி, சிரஞ்சித், காஞ்சன் முல்லிக் உள்ளிட்டோருக்கும் இந்த முறை சீட் வழங்கப்படவில்லை. நீக்கப்பட்டவர்களுக்குக் கட்சியில் வேறு பொறுப்புகள் வழங்கப்படும் என மம்தா தெரிவித்துள்ளார்.
புதிய முகங்கள் மற்றும் கூட்டணி
முன்னாள் இடதுசாரி தலைவர் க்ஷிதி கோஸ்வாமியின் மகள் வசுந்தரா கோஸ்வாமி மற்றும் எம்பி கல்யாண் பானர்ஜியின் மகன் சிர்சன்யோ பானர்ஜி போன்ற வாரிசு அரசியல் பிரமுகர்கள் புதிய முகங்களாகக் களம் இறக்கப்பட்டுள்ளனர். மலைப்பகுதிகளில் அனித் தாபா தலைமையிலான BGPM கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதாக மம்தா உறுதிப்படுத்தினார்.
