மகாராஷ்டிராவின் கோண்டியா மாவட்டத்தில் உள்ள அர்ஜுனி மோர்காவ் தாலுகாவைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி ஷோபா ஹரிதாஸ் ரஹதே. இவர் ஞாயிற்றுக்கிழமை காலை தனது மருமகள் மற்றும் சிலருடன் கோதன்கான் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் டெண்டு இலைகளைச் சேகரிக்கச் சென்றுள்ளார். அப்போது புதர் மறைவில் இருந்த புலி ஒன்று திடீரென ஷோபாவைத் தாக்கியது.
தப்பியோடிய புலி - வனத்துறை நடவடிக்கை
ஷோபாவின் மருமகளும் மற்றவர்களும் கூச்சலிட்டதை அடுத்து, அந்தப் புலி அடர்ந்த வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தது. இருப்பினும், புலி தாக்கியதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், நவேகாவன்பாந்த் பகுதியில் இருந்து விரைவு அதிரடிப் படையினரை வரவழைத்துள்ளனர். புலியைப் பிடிக்க அப்பகுதியில் கேமராக்கள் மற்றும் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக வனச்சரக அலுவலர் மிலிந்த் பவார் தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்து அரங்கேறும் தாக்குதல்கள்
உயிரிழந்த மூதாட்டியின் குடும்பத்திற்கு முதற்கட்டமாக 50,000 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதே பகுதியில் கடந்த சனிக்கிழமை சுனிதா என்ற பெண் புலித் தாக்குதலில் காயமடைந்த நிலையில், மறுநாளே இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. தற்போது இப்பகுதி மக்கள் மகுவா மலர்கள் மற்றும் டெண்டு இலைகளைச் சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால், அவர்கள் அடர்ந்த காட்டுக்குள் செல்வதே இத்தகைய தாக்குதல்களுக்குக் காரணமாக அமைவதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
