மத்தியப் பிரதேச மாநிலம் ராய்சென் மாவட்டத்தில், தனது மகன் ஒரு பெண்ணுடன் ஓடிப்போன ஆத்திரத்தில், 70 வயது முதியவரை ஒரு கும்பல் கடத்திச் சென்று கொடூரமாகத் தாக்கியதுடன், அவரைச் சிறுநீர் குடிக்க வைத்த அராஜகம் அரங்கேறியுள்ளது. மனிதநேயமற்ற இந்தச் செயல் வீடியோவாக எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பரவியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடத்தலும் அரங்கேறிய அத்துமீறல்களும்
அகரியா மார்கோ கிராமத்தைச் சேர்ந்த பிஹாரி பன்சாரா என்பவரின் மகன், அண்டை மாவட்டமான விதிஷாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓடிப்போனார். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண்ணின் தரப்பைச் சேர்ந்த 12 பேர் கொண்ட கும்பல், பன்சாராவின் வீட்டிற்குள் புகுந்து அவரையும் அவரது மனைவியையும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். பின்னர், முதியவர் பன்சாராவை வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்ற அக்கும்பல், சுமார் 150 கி.மீ தொலைவில் உள்ள ராஜ்கர் மாவட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது. அங்கு அவரை ஒரு பாட்டிலில் இருந்த சிறுநீரை வலுக்கட்டாயமாகக் குடிக்க வைத்து சித்ரவதை செய்துள்ளனர்.
போலீஸ் மெத்தனமும் டிஜிபியிடம் புகாரும்
பாதிக்கப்பட்ட முதியவரின் குடும்பத்தினர் முதலில் உள்ளூர் காவல் நிலையத்தை அணுகியபோது, போலீசார் நடவடிக்கை எடுக்க மறுத்ததோடு, தங்களை மிரட்டியதாக மருமகள் கீதாபாய் குற்றம் சாட்டியுள்ளார். "எனது மாமனாரைக் கடத்திச் சென்று துப்பாக்கி முனையில் மிரட்டித் தாக்கினர். இது குறித்துப் புகார் அளிக்கச் சென்றபோது, வெளியில் சொன்னால் எங்களையும் தாக்குவோம் எனப் போலீசார் மிரட்டினர்" என்று அவர் வேதனை தெரிவித்தார். இறுதியில், தங்களுக்கு நீதி கிடைக்காததால் முதியவர் பன்சாரா போபாலிற்குச் சென்று மாநில டிஜிபியிடம் ஆதாரங்களுடன் புகார் அளித்தார்.
காவல்துறை நடவடிக்கை
தற்போது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ராய்சென் மற்றும் ராஜ்கர் மாவட்ட போலீசார் ஒருங்கிணைந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இது குறித்துப் பேசிய காவல்துறை அதிகாரி பிரதிபா சர்மா, முதியவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
