லக்னோவில் காணாமல் போன 16 வயது சிறுமியைத் தேடி வந்த போலீசாருக்கு, ஒரு தந்தை தன் மகளையே ஆணவக் கொலை செய்த அதிர்ச்சிகரமான உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது காதலனுடனான உறவைத் துண்டிக்க மறுத்த வந்தனா சௌபே என்ற அந்தச் சிறுமியை, அவர் தந்தை கழுத்தை நெரித்துக் கொன்று, அடையாளம் தெரியாமல் இருக்க முகத்தில் ஆசிட் ஊற்றிய கொடூரம் அரங்கேறியுள்ளது.
கௌரவத்திற்காகக் கொலை செய்யப்பட்ட மகள்
கடந்த 2025 ஆகஸ்ட் மாதம், வந்தனா தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் மீட்கப்பட்டு வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட நிலையில், காதலன் மூன்று மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இருப்பினும், நவம்பரில் காதலன் சிறையிலிருந்து வந்த பிறகும் வந்தனா அவருடன் தொடர்பில் இருந்துள்ளார். லக்னோவில் பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றும் விஜய் குமார் சௌபே, தனது மகளின் இந்த செயலால் சமூகத்தில் அவமானம் ஏற்பட்டதாகக் கருதி, பலமுறை வீட்டை மாற்றியுள்ளார். பலமுறை வற்புறுத்தியும் வந்தனா காதலைக் கைவிடாததால், அவரைக் கொல்ல தந்தை திட்டமிட்டதாகத் தெரிகிறது.
ஆசிட் ஊற்றிக் கொல்லப்பட்ட கொடூரம்
தனது நண்பன் அப்துல் மன்னானுடன் இணைந்து விஜய் குமார் ஒரு திட்டத்தைத் தீட்டினார். கடந்த ஏப்ரல் 13 அன்று, வந்தனாவுக்குப் பேய் ஓட்டுவதாகக் கூறி ராஜஸ்தானுக்கு ஒரு வாடகை காரில் அழைத்துச் சென்றுள்ளனர். பாரபங்கி அருகே ஒதுக்குப்புறமான இடத்தில் கார் நின்றபோது, தூங்கிக் கொண்டிருந்த வந்தனாவை இருவரும் சேர்ந்து கழுத்தை நெரித்துக் கொன்றனர். அடையாளம் தெரியாமல் இருக்க முகத்தில் ஆசிட் ஊற்றியவர்கள், உடலை கால்வாயில் வீச முயன்றனர். ஆனால் வாகனங்கள் வருவதைக் கண்டு பயந்து, உடலை சாலையோரத்திலேயே போட்டுவிட்டுத் தப்பினர்.
போலீஸ் விசாரணையில் அம்பலமான உண்மை
ஏப்ரல் 16 அன்று, தனது மகள் காணாமல் போய்விட்டதாகப் புகார் அளித்து விஜய் குமார் நாடகமாடினார். ஆனால், காவல்துறையினர் சிறுமியின் அழைப்பு விவரங்கள் (Call Records) மற்றும் சந்தேக நபர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் தந்தையின் சதி அம்பலமானது. சமூக கௌரவத்திற்குப் பயந்து மகளைக் கொன்றதை விஜய் குமார் ஒப்புக்கொண்டார். இதையடுத்து 34 வயதான விஜய் குமார் சௌபே மற்றும் அவரது நண்பர் அப்துல் மன்னான் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
