கேரள மாநில மக்களின் நீண்டகாலக் கனவான ‘கேரளம்’ என்ற பெயர் மாற்றக் கோரிக்கைக்கு மத்திய அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது. மலையாள மொழியின் தனித்துவத்தைப் போற்றும் வகையில், மாநிலத்தின் பெயரை 'கேரளா' என்பதிலிருந்து 'கேரளம்' என மாற்றக் கோரி அம்மாநிலச் சட்டமன்றத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மத்திய அமைச்சரவை, டெல்லியில் புதிதாகத் திறக்கப்பட்ட 'சேவா தீர்த்தம்' அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கு முறைப்படி ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் இனி 'கேரளம்' என்ற பெயரே இடம்பெறவுள்ளது.
முதல்வர் பினராயி விஜயனின் முன்னெடுப்பு
சுதந்திரப் போராட்டக் காலத்திலிருந்தே மலையாளம் பேசும் மக்கள் ஒன்றிணைந்து 'கேரளம்' என்ற பெயரிலேயே தங்களது மாநிலத்தை அழைத்து வந்தனர். இருப்பினும், இந்திய அரசியலமைப்பின் முதல் அட்டவணையில் 'கேரளா' என்றே பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த முரண்பாட்டைச் சரிசெய்யும் வகையில், முதல்வர் பினராயி விஜயன் முன்மொழிந்த தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக 2023-ல் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்தில் சில தொழில்நுட்பத் திருத்தங்களை மத்திய உள்துறை அமைச்சகம் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து, 2024-ல் மீண்டும் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தற்போது மத்திய அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
அடுத்தகட்ட நடைமுறை
மத்திய அமைச்சரவையின் இந்த ஒப்புதலைத் தொடர்ந்து, 'கேரளம் (பெயர் மாற்றம்) மசோதா 2026' விரைவில் குடியரசுத் தலைவரால் கேரளச் சட்டமன்றத்தின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு ஒப்புதல் பெறப்பட்டதும், நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். இறுதியாகக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பின் அதிகாரப்பூர்வமாகப் பெயர் மாற்றம் நடைமுறைக்கு வரும். கேரளாவில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இந்த அதிரடி நடவடிக்கை அம்மாநில அரசியலில் மிக முக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
