கேரள மாநிலம் நெடுமங்காடு பகுதியில் ஒன்றரை வயதுக் குழந்தை ஒன்று, அதன் தாயார் மற்றும் கள்ளக்காதலனால் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குழந்தையின் உடலில் 51 இடங்களில் பலத்த காயங்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் நாடகமாடிய அஷ்கர்
நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்த அர்ஷித் என்ற அந்த ஒன்றரை வயதுக் குழந்தையை, கடந்த வெள்ளிக்கிழமை மாலை அவசர நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அஷ்கர் என்பவர் கொண்டு வந்துள்ளார். மதிய உணவு சாப்பிடும் போது குழந்தையின் தொண்டையில் உணவு சிக்கிக் கொண்டதாக அஷ்கர் மருத்துவர்களிடம் கூறி நாடகமாடியுள்ளார். ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே அந்தப் பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
மரணத்தில் சந்தேகம்: அம்பலமான கொடூரம்
குழந்தையின் மரணத்தில் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து நடந்த பிரேதப் பரிசோதனையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. வாரக்கணக்கில் தொடர்ந்து நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல்களால், குழந்தையின் உடலில் உள் ரத்தப்போக்கு ஏற்பட்டு அதுவே மரணத்திற்கு முதன்மைக் காரணமாக அமைந்துள்ளது தெரியவந்தது. குறிப்பாகக் குழந்தையின் உடலில் மற்றும் பிறப்புறுப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மொத்தம் 51 காயங்கள் மற்றும் தழும்புகள் கண்டறியப்பட்டன. சிகரெட் மற்றும் லைட்டரால் சுடப்பட்ட காயங்களும் அதில் இருந்தன. மேலும், குழந்தையின் அலறல் சத்தத்தை அடக்குவதற்காக, அஷ்கர் குழந்தையின் தலையைச் சுவரில் பலமுறை மோதியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
காப்பாற்றக் கோரிய பாட்டியின் கண்ணீர்
உயிரிழந்த குழந்தையின் தந்தை கடந்த 2024-ஆம் ஆண்டே இறந்துவிட்ட நிலையில், அதன் பிறகு தாய் அகிலா, அஷ்கருடன் பனவூர் பகுதியில் வாடகை வீட்டில் குடும்பம் நடத்தி வந்தார். இதுகுறித்து குழந்தையின் பாட்டி ரீனா கூறுகையில், “அவர்கள் குழந்தையை வளர்க்க விரும்பவில்லை என்றால் எங்களிடம் ஒப்படைக்குமாறு பலமுறை கெஞ்சினேன். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. ஏற்கனவே குழந்தையின் கைகள் உடைந்திருந்தபோதே அஷ்கர் மீது போலீசில் புகார் அளித்தேன். ஆனால் போலீஸார் அதைச் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை” என்று கண்ணீருடன் குற்றம் சாட்டியுள்ளார்.
குற்றவாளியின் முந்தைய பின்னணி
கைது செய்யப்பட்டுள்ள அஷ்கர் ஏற்கனவே குடும்ப வன்முறைகளில் ஈடுபட்டவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அஷ்கரின் முதல் மனைவியின் தாயார் கூறுகையில், இதேபோல சுவரில் தலையை முட்டி கொடூரமாகத் தாக்கியதால் தங்களது மகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக மனநல சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார். சம்பவத்தின் போது தாய் அகிலா நடன நிகழ்ச்சி ஒன்றிற்காகத் தமிழகம் வந்திருந்ததாகக் கூறப்பட்டாலும், குழந்தைக்குத் தொடர்ச்சியாக நடந்த சித்திரவதைகளைத் தடுக்காமல் உடந்தையாக இருந்ததால், அகிலா மற்றும் அஷ்கர் இருவர் மீதும் கொலைக் குற்றம் மற்றும் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சாட்சியங்கள் சேகரிப்புக்காக அஷ்கரை போலீஸார் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றபோது பொதுமக்கள் ஆத்திரமடைந்து முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Follow us on our official WhatsApp channel for breaking news alerts and updates!
