நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள தமிழக - கேரள எல்லைப் பகுதியான தாளூரில், கேரள அரசு திடீரென 'உங்களை வரவேற்கிறது' என்ற அறிவிப்பு பலகையை வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு மாநிலங்களையும் பிரிக்கும் பாலத்திற்கு அருகிலுள்ள தமிழகப் பகுதியை கேரளா உரிமை கொண்டாடுவதாகக் கூறி, அப்பகுதி மக்கள் திரண்டதால் எல்லையில் பதற்றமான சூழல் உருவானது. இதனைத் தொடர்ந்து அசம்பாவிதங்களைத் தவிர்க்க இரு மாநில போலீஸாரும் அங்கு பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கடந்த 2018-ஆம் ஆண்டிலும் இதேபோல தமிழக எல்லைக்குள் கேரளா சாலைகளில் குறியீடுகள் இட்டும், நென்மேணி ஊராட்சி சார்பில் பெயர்ப் பலகை வைத்தும் ஆக்கிரமிப்பு செய்ய முயன்றது குறிப்பிடத்தக்கது. அப்போது நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அளித்த புகாரின் பேரில் அதிகாரிகள் தலையிட்டு நிலையைச் சீர்செய்த நிலையில், தற்போது மீண்டும் அதே சர்ச்சை உருவெடுத்துள்ளது.
இந்தப் பிரச்சினை குறித்து விளக்கமளித்துள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, தமிழக எல்லையான தாளூர் பகுதியில் பழைய பலகைக்கு மாற்றாகப் புதிய பலகையை கேரளா வைத்துள்ளதால் இந்தச் சிக்கல் எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வயநாடு மாவட்ட ஆட்சியரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, சர்ச்சைக்குரிய அந்தப் பலகையை உடனடியாக அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், எல்லையைத் துல்லியமாகக் கண்டறிய இரு மாநில அதிகாரிகளும் இணைந்து விரைவில் 'டிஜிட்டல் சர்வே' செய்ய உள்ளனர். அந்த ஆய்வின் முடிவுகள் வெளியாகும் வரை எல்லையில் எந்தவித மாற்றமும் செய்யாமல் தற்போதைய நிலையே (Status Quo) தொடர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.
