இந்தியாவின் தொழில்நுட்ப மையமாகக் கருதப்படும் கர்நாடக மாநிலத்தில், 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் சமூக வலைதளங்களைப் (Social Media) பயன்படுத்துவதற்கு அம்மாநில அரசு அதிரடித் தடையை விதித்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 06) கர்நாடக மாநில பட்ஜெட்டைத் தாக்கல் செய்து உரையாற்றிய முதல்வர் சித்தராமையா, இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதன் மூலம், குழந்தைகளுக்கான சமூக வலைதளத் தடையை இந்தியாவில் அமல்படுத்தும் முதல் மாநிலமாக கர்நாடகா மாறியுள்ளது.
தடைக்கான காரணம் என்ன?
சிறுவயதிலேயே மொபைல் போன் பயன்பாடு அதிகரித்து வருவதும், அதன் மூலம் ஏற்படும் எதிர்மறையான விளைவுகளைத் தடுப்பதும் தான் இந்த முடிவின் முக்கிய நோக்கம் என்று முதல்வர் தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார். "குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அதிகரித்து வரும் மொபைல் மோகத்தின் பக்கவிளைவுகளில் இருந்து அவர்களைப் பாதுகாக்க இந்தத் தடை விதிக்கப்படுகிறது" என்று அவர் கூறினார். இந்த அறிவிப்பு பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
