கர்நாடகா மாநிலம் சிக்கபள்ளாப்பூர் மாவட்டம் கௌரிபிதனூர் தாலுகாவில் உள்ள அலிப்பூர் கிராமம், ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவையொட்டி பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. ஷியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் இந்த கிராமத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் கருப்பு உடை அணிந்தும், கருப்பு கொடிகளை ஏந்தியும் மசூதி முன் திரண்டனர். அஞ்சுமன்-இ-ஜாப்ரியா கமிட்டியின் அழைப்பை ஏற்று திரண்ட மக்கள், அலி கமேனியின் உருவப்படங்களை ஏந்தி குர்ஆன் ஓதி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் கூட்டுத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த மக்கள், இதற்கு பழிவாங்க வேண்டும் என முழக்கமிட்டனர்.
வெறிச்சோடிய கிராமம்
தலைவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், அலிப்பூரில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் தானாக முன்வந்து மூடப்பட்டன. இதனால் கிராமமே மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. மசூதியில் இருந்து சையத் முஸ்தபா ஹுசைன் வட்டம் வரை நடைபெற்ற பிரம்மாண்ட ஊர்வலத்தின் போது, ஈரான் தலைவரைப் புகழ்ந்து பாடல்கள் பாடப்பட்டன. அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, அலிப்பூர் கிராமம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை முதல் மூன்று நாட்களுக்குத் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அலிப்பூருக்கும் ஈரானுக்கும் இடையிலான வரலாற்றுப் பிணைப்பு
சுமார் 25,000 ஷியா மக்கள் வசிக்கும் அலிப்பூர் கிராமத்திற்கும் ஈரானுக்கும் நீண்டகால தொடர்பு உள்ளது. 1986-ஆம் ஆண்டு அயதுல்லா அலி கமேனி இக்கிராமத்திற்கு வருகை தந்ததைத் தொடர்ந்து இந்த உறவு வலுப்பெற்றது. அவரது நினைவாக கிராமத்தில் ஒரு மருத்துவமனையும் கட்டப்பட்டுள்ளது. தற்போது ஈரானில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காகச் சென்றுள்ள தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்து இக்கிராமத்தைச் சேர்ந்த பல குடும்பங்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.
