இந்தியாவில் 'செயலற்ற கருணைக் கொலை' செய்ய உச்ச நீதிமன்றத்தால் அனுமதி வழங்கப்பட்ட முதல் நபரான ஹரிஷ் ராணா (31), டெல்லி எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில் நேற்று (மார்ச் 24) காலமானார். அவரது உடல் இன்று டெல்லியில் உள்ள கிரீன் பார்க் மயானத்தில் இறுதிச் சடங்கிற்காகக் கொண்டு வரப்பட்டது.
பின்னணி மற்றும் சட்டப் போராட்டம்
உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தைச் சேர்ந்த ஹரிஷ் ராணா, கடந்த 2013-ஆம் ஆண்டு சண்டிகரில் பி.டெக் படித்துக் கொண்டிருந்தபோது, தங்கும் விடுதியின் 4-வது மாடியிலிருந்து தவறி விழுந்தார். இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து அவர் 'கோமா' நிலைக்கு (Vegetative State) சென்றார். கடந்த 13 ஆண்டுகளாக உணர்வற்ற நிலையில் இருந்த அவருக்கு, குழாய் மூலம் மட்டுமே உணவு அளிக்கப்பட்டு வந்தது.
அவர் மீண்டும் குணமடைய வாய்ப்பில்லை என்பதை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், கடந்த மார்ச் 11-ஆம் தேதி அவருக்கு 'செயலற்ற கருணைக் கொலை' செய்ய (அதாவது உயிர் காக்கும் மருத்துவக் கருவிகளைப் பிரித்தெடுக்க) வரலாற்றுச் சிறப்புமிக்க அனுமதியை வழங்கியது.
உடல் உறுப்பு தானம்
மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை நிறுத்தப்பட்ட நிலையில், நேற்று மாலை 4:10 மணிக்கு ஹரிஷ் ராணா இயற்கை எய்தினார். அவரது மறைவுக்குப் பின், அவரது குடும்பத்தினர் ஹரிஷின் கண்கள் (Corneas) மற்றும் இதய வால்வுகளை (Heart valves) தானம் செய்து மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளனர். 13 ஆண்டுகால ஒரு குடும்பத்தின் நீண்ட போராட்டமும், ஒரு இளைஞனின் துயரமும் இன்றுடன் அமைதியாக முடிவுக்கு வந்தது.