உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் கலாச்சாரத் துறைகளில் இந்தியாவின் அபரிமிதமான வளர்ச்சியைப் பாராட்டி பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். இந்தியா வெறும் புதிய கண்டுபிடிப்புகளில் பங்கேற்பதோடு நிற்காமல், இன்று உலகையே வழிநடத்திக் கொண்டிருப்பதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.
தொழில்நுட்ப உலகின் உச்சத்தில் இந்தியர்கள்
உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளில் இந்தியர்கள் வகிக்கும் முக்கியத்துவத்தை மேக்ரான் பட்டியலிட்டார். இது குறித்து அவர் பேசுகையில், "Alphabet (கூகுள்) சுந்தர் பிச்சை, Microsoft சத்யா நாதெல்லா, IBM அரவிந்த் கிருஷ்ணா, Adobe சாந்தனு நாராயண், Palo Alto Networks நிகேஷ் அரோரா, Novartis வசந்த் நரசிம்மன் ஆகியோர் முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் (CEO) இந்தியர்களாக இருப்பது, உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் தாக்கத்தைப் பிரதிபலிக்கிறது என்றார்.
பிரான்சின் அடையாளத்திலும் இந்தியப் பெருமை
தொழில்நுட்பம் மட்டுமின்றி, ஃபேஷன் மற்றும் கலாச்சாரத் துறையிலும் இந்தியா முத்திரை பதித்துள்ளதை மேக்ரான் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, பிரான்சின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் பாரம்பரியமிக்க 'ஷானல்' (Chanel) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக, மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரைச் சேர்ந்த லீனா நாயர் இருப்பதை அவர் சுட்டிக்காட்டிப் பாராட்டினார்.
வளர்ச்சியின் புதிய முகம்
"சிலிகான் வேலி முதல் சாம்ப்ஸ்-எலிசிஸ் (Champs-Elysees) வரை, தொழில்நுட்பம் முதல் கலாச்சாரம் வரை இந்தியா இன்று தலைமை தாங்கி நடத்துகிறது. இந்தியா உலகளாவிய கண்டுபிடிப்புகளில் ஒரு பங்காளியாக மட்டும் இல்லாமல், ஒரு தலைவனாக உருவெடுத்துள்ளது" என்று மேக்ரான் தனது உரையில் குறிப்பிட்டார்
