குவாஹாத்தி விமானப்படைத் தளத்தில் இருந்து நேற்று மாலை வழக்கமான பயிற்சிக்காகப் புறப்பட்ட இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சுகோய்-30 எம்கேஐ (Su-30 MKI) ரக போர் விமானம் திடீரென விபத்துக்குள்ளானது. ஓடுதளத்தில் இருந்து கிளம்பிய சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை அந்த விமானம் இழந்ததால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், உடனடியாகத் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். தீவிர தேடுதலுக்குப் பிறகு, அசாம் மாநிலம் கார்பி அங்கிலாங் மாவட்டத்தில் உள்ள சோக்கி ஹோலா என்ற மலைப்பகுதியில் விமானம் நொறுங்கிக் கிடப்பது உறுதி செய்யப்பட்டது. விபத்து நடந்த இடத்திற்கு விரைந்துள்ள மீட்புக்குழுவினர் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், விமானத்தை இயக்கிய விமானியின் நிலை என்ன என்பது குறித்து இதுவரை தகவல் கிடைக்கவில்லை. அவர் மாயமாகியுள்ளதாகத் தெரிவித்துள்ள பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர், அடர்ந்த காட்டுப்பகுதியான அவ்விடத்தில் விமானியைத் தேடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
