எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் நீதித்துறை குறித்து ‘ஊழல்’ குற்றச்சாட்டுகளை முன்வைத்த விவகாரத்தில், மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது. இந்த விவகாரத்தை ஒரு சாதாரணத் தவறுடன் கடந்து செல்ல முடியாது என்றும், இதற்குப் பின்னால் இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் அதிரடி காட்டியுள்ளது.
வழக்கின் பின்னணி என்ன?
மத்திய கல்வி வாரியத்தின் (NCERT) புதிய 8-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில், இந்திய நீதித்துறையில் ஊழல் நிலவுவதாகவும், குறிப்பாகப் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு நீதி கிடைப்பதில் இது பெரும் தடையாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், சுமார் 5 கோடிக்கும் அதிகமான வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் தேங்கிக் கிடப்பதாகப் புள்ளிவிவரங்களுடன் அந்தப் பாடம் விவரிக்கிறது.
இதில் 2025-ம் ஆண்டு முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், ஊழல் மற்றும் தவறான நடத்தை குறித்துப் பேசிய கருத்துகளும் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
இன்று நடைபெற்ற விசாரணையில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது "இந்த விவகாரத்தை அரசு மிகத் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. சர்ச்சைக்குரிய அந்த அத்தியாயம் இடம்பெறக் காரணமான இரண்டு நபர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் இனி எந்த அமைச்சகப் பணிகளிலும் ஈடுபட முடியாதவாறு நீக்கப்பட்டுள்ளனர். நீதித்துறைக்கு எதிராக அரசு எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை." என தெரிவித்தார்.
தலைமை நீதிபதியின் ஆவேசம்
அரசின் விளக்கத்தை ஏற்றுக்கொண்டாலும், இந்த விவகாரத்தில் ஆழமான விசாரணை தேவை எனத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்தார். "நீதித்துறையின் தலைவர் என்ற முறையில், இதற்குப் பொறுப்பானவர்களைத் தண்டிப்பது எனது கடமை. இதில் சம்பந்தப்பட்டவர்களின் 'தலைகள் உருள வேண்டும்' (தண்டிக்கப்பட வேண்டும்). முறையான நடவடிக்கை எடுக்கப்படும் வரை இந்த வழக்கை நான் முடிக்கப் போவதில்லை" எனத் திட்டவட்டமாகக் கூறினார்.
பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய தகவல்கள்
- உச்ச நீதிமன்றத்தில் 81 ஆயிரம், உயர் நீதிமன்றங்களில் 62.40 லட்சம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் 4.70 கோடி வழக்குகள் தேக்கம்.
- நீதித்துறையின் பல்வேறு மட்டங்களில் மக்கள் ஊழலை எதிர்கொள்வதாகவும், இது ஏழைகளுக்கு நீதி கிடைப்பதில் சிக்கலை ஏற்படுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது.
- வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், நம்பிக்கையை வளர்க்கவும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என அந்தப் பாடத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தற்போது இந்த விவகாரம் நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் இருப்பதால், அடுத்தகட்டமாக யார் மீது நடவடிக்கை பாயும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
