பிரதமர் நரேந்திர மோடி ஹர்தோய் மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த விரைவுச்சாலையை இன்று தொடங்கி வைக்கிறார்.
மீரட் முதல் பிரயாக்ராஜ் வரை 594 கிலோமீட்டர் நீளத்தில் அமைந்துள்ள இந்த ஆறு வழி விரைவுச்சாலை, மாநிலத்தின் நீளமான எக்ஸ்பிரஸ்வேயாகும். 2022 நவம்பரில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் சுமார் 36,230 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மணிக்கு 120 கிமீ வேகத்தில் பயணிக்க ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சாலை மூலம், முன்பு 10 முதல் 12 மணி நேரம் எடுத்த பயணம் தற்போது சுமார் 6 மணி நேரமாக குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த எக்ஸ்பிரஸ்வே, மாநிலத்தின் மேற்கு, மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளை நேரடி அதிவேக இணைப்பில் கொண்டு வருகிறது.
சுமார் 7,453 ஹெக்டேர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டம், உத்தரப் பிரதேச எக்ஸ்பிரஸ்வே தொழில்துறை மேம்பாட்டு ஆணையம் மேற்பார்வையில் நான்கு கட்டங்களாக கட்டப்பட்டது. இதில் மூன்று கட்டங்களை அதானி இன்ப்ராஸ்ட்ரக்சர் மற்றும் ஒரு கட்டத்தை ஐஆர்பி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் மேற்கொண்டது.
பாதுகாப்பு அம்சங்களாக, ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் சிசிடிவி கண்காணிப்பு, தெரு விளக்குகள், மற்றும் சாலையின் இருபுறங்களிலும் ஒளிரும் சிக்னல் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
மீரட், ஹாபூர், புலந்த்ஷஹர், அம்ரோஹா, சம்பல், புத்தவுன், ஷாஜகான்பூர், ஹர்தோய், உன்னாவ், ரேபரேலி, மற்றும் பிரயாக்ராஜ் உள்ளிட்ட 12 மாவட்டங்களை இணைக்கும் இந்த விரைவுச்சாலை, எதிர்காலத்தில் எட்டு வழிச்சாலையாக விரிவாக்கப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் மூலம் லக்னோ மற்றும் பிரயாக்ராஜ் இடையிலான பயண நேரமும் குறிப்பிடத்தக்க அளவில் குறையும் என்பதால், மாநில மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
