"அக்கா என்னை காப்பாத்துங்க!" என்று தனது சகோதரியிடம் கதறிய 28 வயது பெண் வீணா குமாரி, போன் கால் துண்டிக்கப்பட்ட ஏழே நிமிடங்களில் சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்துள்ளார். மேற்கு டெல்லியின் இந்திரபுரி பகுதியில் உள்ள ஒரு மூன்று மாடி கட்டிடத்தின் கூரையிலிருந்து வீணா கீழே விழுந்துவிட்டதாக அவரது கணவர் ராஜு சிங் கூறியுள்ளார். ஆனால், வீணாவின் மரணத்திற்கு அவரது கணவர் வீட்டார் கொடுத்த வரதட்சணை கொடுமையும், கடுமையான உடல் ரீதியான தாக்குதலுமே காரணம் என்று பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஏழு நிமிட இடைவெளியில் வந்த இரு போன் கால்கள்
கடந்த மே 18-ஆம் தேதி இரவு 9:55 மணிக்கு வீணா குமாரி தனது சகோதரி ரீனாவைத் தொடர்பு கொண்டு, "அக்கா என்னை காப்பாத்துங்க. அவங்க என்னை ரொம்ப அடிக்கிறாங்க. நான் உயிரோட இருக்க மாட்டேன்னு தோணுது... என்னை அவங்க கொலை செஞ்சிடுவாங்க" என்று அழுதுகொண்டே கூறியுள்ளார். மேலும், தான் இறந்த பிறகு தனது ஆறு மாத ஆண் குழந்தையை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுமாறும் வீணா தனது சகோதரியிடம் கேட்டுள்ளார். அடுத்த சில விநாடிகளில் போன் கால் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ரீணா, உடனடியாக வீணாவின் கணவர் வீட்டிற்குப் புறப்பட்டார். ஆனால், அடுத்த 7 நிமிடங்களில், அதாவது இரவு 10:02 மணிக்கு வீணாவின் மைத்துனர் ரீணாவைத் தொடர்பு கொண்டு, "அண்ணி மாடியில் இருந்து கீழே விழுந்துவிட்டார்" என்று கூறியுள்ளார்.
புல்லட் பைக்கிற்காகக் கொடூர வரதட்சணை கொடுமை
உத்தரபிரதேசத்தின் சம்பல் பகுதியைச் சேர்ந்த வீணாவிற்கும் ராஜுவிற்கும் கடந்த 2022-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. அதன் பின்னர் 2023-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அவர்கள் டெல்லிக்குக் குடிபெயர்ந்தனர். இவர்களின் மூன்று ஆண்டு திருமண வாழ்க்கை தற்போது மர்மமான முறையில் முடிவுக்கு வந்துள்ளது. வீணாவின் சகோதரர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், "என் தங்கைக்குத் திருமணத்தின் போது செய்த சீர்வரிசைகள் கணவர் வீட்டாருக்குப் திருப்தி அளிக்கவில்லை. ராயல் என்பீல்டு புல்லட் பைக் கேட்டு என் தங்கையைத் தொடர்ந்து சித்திரவதை செய்துள்ளனர். அவளது கணவர் ராஜுவும், கடந்த ஏப்ரல் 25 அன்று திருமணமான அவனது தம்பி ராஜ்குமாரும் சேர்ந்து வீணாவை அடிக்கடி அடித்துள்ளனர். ஒருமுறை அவர்கள் காதில் பலமாக அடித்ததில் வீணாவின் காது ஜவ்வு கிழிந்தது" என்று குற்றம் சாட்டியுள்ளார். குடும்ப அவமானம் கருதி வீணா தங்களை போலீசில் புகார் அளிக்க வேண்டாம் என்று தடுத்து வந்ததாகவும் அவர் கூறினார். ஆனால், வீணாவின் மாமனார் ஜெய்பால் இந்த வரதட்சணைக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
கணவர் மற்றும் மைத்துனர் அதிரடி கைது
இச்சம்பவம் குறித்துத் தகவல் தெரிவித்துள்ள மேற்கு டெல்லி துணை போலீஸ் கமிஷனர் சரத் பாஸ்கர், பெண் ஒருவர் கட்டிடத்திலிருந்து கீழே விழுந்துவிட்டதாகக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் வந்ததும், உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்றும், ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர் என்றும் கூறினார். தீன் தயாள் உபாத்யாயா மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு வீணாவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக வரதட்சணைக் கொடுமையால் ஏற்பட்ட மரணம் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, வீணாவின் கணவர் ராஜு சிங் மற்றும் மைத்துனர் ராஜ்குமார் ஆகிய இருவரையும் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
