டெல்லியில் உள்ள 'புளோரிஷ் ஸ்டே பிஎன்பி' (Flourish Stay BnB) என்ற ஹோட்டலில் புதன்கிழமை அதிகாலையில் பயங்கரத் தீ விபாத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 12 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்திற்குள் புகுந்து மீட்புப் பணியில் ஈடுபட்ட முகமது சோயிப் என்பவர் அங்கிருந்த நெஞ்சை உலுக்கும் காட்சியை விவரித்தார். ஹோட்டலின் தரைத்தளத்தில் உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்த ஒரு கழிவறையை உடைத்துப் பார்த்தபோது, அங்கு ஒரு ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் இறுக்கமாகக் கட்டியணைத்தபடி சடலமாகக் கிடந்துள்ளனர். "அவர்கள் தீயினால் இறக்கவில்லை, மாறாக தீப்பிழம்புகளிலிருந்து தப்பிக்க கழிவறைக்குள் தங்களைப் பூட்டிக்கொண்டுள்ளனர்; ஆனால், நச்சுப் புகை சூழ்ந்ததால் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்" என்று சோயிப் கண்ணீருடன் தெரிவித்தார்.
கட்டிப்பிடித்தபடி பிரிந்த உயிர்கள்
மீட்புக் குழுவினர் அந்தப் பூட்டப்பட்ட கழிவறையை உடைத்தபோது, அங்குள்ள காரை மீது அந்தப் பெண் அமர்ந்திருக்க, அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த அந்த நபர், அவளைத் தப்ப வைக்க முயன்று இறுக்கமாகக் கட்டிப்பிடித்தபடி இருந்துள்ளார். மீட்புக் குழுவினர் அவர்களை வெளியே கொண்டு வந்து முதலுதவி (CPR) அளித்தும் பலனளிக்கவில்லை. நச்சுப் புகையின் வீரியத்தால் அவர்களின் உடல்கள் கருகிக் கறுப்பாக மாறியிருந்தன. மீட்புப் பணியில் ஈடுபட்ட முகமது சோயிப், முகமது அஃப்சல் கான், வசீம் ராஜா, அஷ்ரப் கான் மற்றும் ஆமிர் கான் ஆகியோர் டெல்லி போலீசாருடனும் தீயணைப்புத் துறையினருடனும் இணைந்து உயிரைப் பணயம் வைத்துப் போராடினர். மற்றொரு அறையில், ஒரு ஜோடி படுக்கையின் ஓரத்தில் அமர்ந்த நிலையிலேயே கருகிச் செத்துக் கிடந்த அதிர்ச்சியூட்டும் காட்சியையும் அவர்கள் கண்டனர்.
நரகமாக மாறிய அடித்தளம்
மேக்ஸ் மருத்துவமனையின் சுகாதாரப் பணியாளரான அஷ்ரப் கான், ஹோட்டலின் உள்பகுதி நரகம்போலக் காட்சியளித்ததாகக் கூறினார். மீட்புக் குழுவினர் அடித்தளத்தின் (Basement) ஷட்டரை உடைத்து உள்ளே நுழைந்தபோது, வரவேற்பு அறைக்கு அருகில் 20 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவரின் உடல் முற்றிலும் கருகிய நிலையில் மீட்கப்பட்டது. அதற்குச் சற்று தள்ளி சக்கர நாற்காலியில் இருந்த ஒரு முதியவரும் தீயில் கருகி உயிரிழந்திருந்தார். இந்தத் தீ விபத்தின் கொடூரம் ஹோட்டலின் அடித்தளத்திலும் தரைத்தளத்திலும்தான் அதிகமாக இருந்துள்ளது. அடித்தளத்தில் மட்டுமே சுமார் 8 பேரின் உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டன.
உயிரைப் பணயம் வைத்த மீட்பு வீரர்கள்
ஹோட்டலின் பிரதான படிக்கட்டுகள் கட்டிடத்தின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்ததாலும், அவசரக் கால வழி (Emergency Exit) இல்லாததாலும் மக்கள் வெளியேற முடியாமல் தவித்துள்ளனர். தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் எந்தவிதப் பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி, புகை மூட்டத்திற்குள் குதித்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கட்டிடத்தின் வெப்பத்தால் தரைத் ஓடுகள் (Tiles) உடைந்து சிதறியிருந்தன. மீட்புப் பணியாளர்கள் படுக்கை விரிப்புகளில் காயமடைந்தவர்களைச் சுமந்து கொண்டு, உடைந்த ஓடுகளின் மீது நடந்ததால் அவர்களின் கால்களில் ரத்தக் காயங்கள் ஏற்பட்டன.
உதவிக் கரம் நீட்டிய பொதுமக்கள்
உள்ளே மீட்புப் பணிகள் நடந்துகொண்டிருந்த அதே வேளையில், வெளியே இருந்த பொதுமக்களும் மனிதநேயத்துடன் உதவினர். ஜன்னல்களை உடைத்து, உள்ளே சிக்கியிருந்தவர்களைக் கீழே குதிக்குமாறு அவர்கள் தைரியமூட்டினர். ரியாசுதீன் அன்சாரி மற்றும் அவரது மகன் அர்மான் ஆகியோர் தங்களது கடையிலிருந்த 20-க்கும் மேற்பட்ட மெத்தைகளைக் கொண்டுவந்து ஹோட்டலுக்கு வெளியே தரையில் பரப்பி வைத்தனர். இதன் மூலம், ஜன்னல் வழியே குதித்த பல விருந்தினர்கள் காயமின்றி உயிர் தப்பினர். இந்த மனிதநேயச் செயலால் ரியாசுதீனுக்கு சுமார் 2 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.
விசாரணையில் அம்பலமான விதிமீறல்கள்
வியாழக்கிழமை காலை 8:30 மணியளவில் ஹோட்டலின் அடித்தளத்தில் ஏற்பட்ட மின் கசிவு (Short Circuit) காரணமாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்தபோது பெரும்பாலான விருந்தினர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். 17 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தன; 58 பேர் மீட்கப்பட்டு மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த ஹோட்டலில் அடுக்கடுக்கான விதிமீறல்கள் இருந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஹோட்டலுக்கு ஒரே ஒரு நுழைவாயில் மற்றும் வெளியேறும் வழி மட்டுமே இருந்துள்ளது. தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்றிதழ் (NOC) பெறப்படவில்லை. வெறும் 6 அறைகள் நடத்த மட்டுமே அனுமதி பெற்றுக்கொண்டு, சட்டவிரோதமாக 25 அறைகளை அவர்கள் இயக்கியுள்ளனர். மேலும், ஜன்னல்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டிருந்தன, பிரதான கதவு சென்சார் மூலம் இயங்கும் வகையில் இருந்தது தீ விபத்தின் போது பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்தவுடன் ஹோட்டல் உரிமையாளர் லவ்கேஷ் பஜாஜ் பயந்துபோய் காரில் தப்பியோடிய நிலையில், அவரைப் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
