டெல்லியில் இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக்கின் 11-வது ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கலந்துகொண்டு உரையாற்றினார். வெளிப்படையான நிர்வாகம், சமூக நீதி, சமச்சீரான முன்னேற்றம் மற்றும் இளைஞர்களுக்கான அதிகாரம் ஆகிய அடிப்படைக் கொள்கைகளை முன்னிறுத்தி, ஒன்றிய அரசுடன் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்புடன் செயல்படத் தமிழ்நாடு அரசு உறுதியுடன் உள்ளதாக அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
2036-க்குள் 1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு
உலகளாவிய பொருளாதாரச் சூழலில் நிச்சயமற்ற நிலை நிலவினாலும், இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகத் திகழும் தமிழ்நாடு, தனது நிலையான வளர்ச்சியைத் தொடர்ந்து நிரூபித்து வருகிறது என்று முதலமைச்சர் விஜய் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான இலக்கில் தமிழகத்தின் பங்களிப்பாக, வரும் 2036-ஆம் ஆண்டிற்குள் 1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாகத் தமிழ்நாடு உயர்ந்திடத் திட்டமிட்டு உழைத்து வருவதாகக் கூறினார். இளைஞர்கள், ஏழைகள், பெண்கள் மற்றும் விவசாயிகள் ஆகிய நான்கு தூண்களை அடிப்படையாகக் கொண்டே இந்தத் தொலைநோக்குப் பார்வை கட்டமைக்கப்பட்டுள்ளதாக அவர் விவரித்தார்.
இளைஞர் திறன் மேம்பாடும் 'வறுமையற்ற தமிழ்நாடு இயக்கமும்'
இந்தியாவின் மிகப்பெரிய வலிமையான இளைஞர் சக்தியை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள கல்வி, புதுமை மற்றும் வேலைவாய்ப்புத் துறைகளில் தமிழக அரசு முதலீடு செய்து வருவதாக அவர் கூறினார். ஆண்டுதோறும் 5 லட்சம் இளைஞர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய 'இண்டர்ன்ஷிப்' (Internship) மற்றும் பயிற்சிகளை வழங்க ஏதுவாக, "இளைஞர் திறன் மற்றும் வேலைவாய்ப்பு இயக்கத்தை" செயல்படுத்த விரும்புவதாகக் குறிப்பிட்டார். அத்துடன், ஏஐ (AI), டீப் டெக்னாலஜி, க்ளவுட் கம்ப்யூட்டிங், செமிகண்டக்டர் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறைகளில் திறன் மேம்பாட்டு மையங்களை அமைக்க ஒன்றிய அரசின் ஆதரவைக் கோரினார். மேலும், ஏழை எளிய குடும்பங்களின் நிலையான வாழ்வாதாரத்தை உறுதி செய்ய "வறுமையற்ற தமிழ்நாடு இயக்கம்" (Poverty-Free Tamil Nadu Mission) என்ற புதிய திட்டத்தை அரசு முன்மொழிவதாகவும், அனைவருக்கும் வீடு என்ற கனவை நனவாக்க ஒன்றிய அரசின் நிதி உதவியை நாடுமாலும் அவர் கேட்டுக்கொண்டார்.
நீட் (NEET) தேர்வுக்குக் கடுமையான எதிர்ப்பு
தமிழ்நாடு மாணவர்களின் கல்வி உரிமைகளைப் பாதுகாப்பதில் மாநில அரசு உறுதியாக உள்ளதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர் விஜய், இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட்' (NEET) நுழைவுத் தேர்வைத் தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்க்கிறது என்பதை டெல்லி மேடையில் மீண்டும் பதிவு செய்தார். இந்தத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, கிராமப்புற மாணவர்களும், சமூக மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார். எனவே, பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே மருத்துவச் சேர்க்கை இடங்களை நிரப்புவதற்குத் தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
கோவையில் 2-வது எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கக் கோரிக்கை
தமிழக மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவக் கல்வியையும், உயர்தர மருத்துவச் சேவைகளையும் தடையின்றி வழங்குவதை உறுதி செய்யும் நோக்கில், தமிழ்நாட்டிற்கு இரண்டாவது எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையைக் கோயம்புத்தூரில் அமைக்க ஒன்றிய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் கோரிக்கை விடுத்தார். இந்த அதிநவீன மருத்துவமனை அமைப்பதற்குத் தேவையான நிலத்தை மாநில அரசே முழுமையாக வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார். மேலும், பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மையமாகக் கொண்டு மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தைத் தமிழ்நாடு எட்டியுள்ளதாகவும் தனது உரையில் அவர் சுட்டிக்காட்டினார்.
