மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) தனது கல்வி முறையில் பல்வேறு முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இதன்படி, 2026-27-ம் கல்வியாண்டு முதல் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழிக் கொள்கை கட்டாயமாக்கப்பட உள்ளது. இதில் மாணவர்கள் பயிலும் மூன்று மொழிகளில் குறைந்தது இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பன்மொழி அறிவை வளர்க்கும் நோக்கில் கொண்டுவரப்படும் இந்தத் திட்டத்தில், வெளிநாடுகளில் படித்துவிட்டு தாயகம் திரும்பும் மாணவர்களுக்கு மட்டும் சில குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் விலக்கு அளிக்கப்படும் என சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கணிதம் மற்றும் அறிவியலில் புதிய தேர்வு முறை
இதேபோல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் 'இருநிலைத் தேர்வு முறை' (Dual Level Exam) அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்படி, அனைத்து மாணவர்களும் 80 மதிப்பெண்களுக்கான பொதுவான 'தரநிலை' (Standard) தேர்வை கட்டாயம் எழுத வேண்டும். கூடுதலாகத் திறன் பெற விரும்பும் மாணவர்கள் 25 மதிப்பெண்களுக்கான 'மேம்பட்ட நிலை' (Advanced) தேர்வை விருப்பப் பாடமாகத் தேர்வு செய்து எழுதலாம். இந்தத் தேர்வில் 50 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களின் சான்றிதழில் 'மேம்பட்ட நிலைத் தகுதி' என்று குறிப்பிடப்படும். இருப்பினும் இந்த மதிப்பெண்கள் ஒட்டுமொத்த தேர்ச்சி முடிவில் சேர்க்கப்படாது.
பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு
இந்த புதிய கல்வி கட்டமைப்பின் கீழ், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பொதுத்தேர்வு வரும் 2028-ம் கல்வியாண்டு முதல் நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், சர்வதேச தரத்திற்கு இணையாக அவர்களை உருவாக்கவும் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்படுவதாக வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
