இந்தியத் தலைநகர் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகம் மற்றும் ஒன்பது முன்னணிப் பள்ளிகளுக்கு இன்று (திங்கள்கிழமை) மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் தலைநகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, தீவிர சோதனை நடத்தப்பட்டது.
மின்னஞ்சலில் இருந்த அதிர்ச்சித் தகவல்
இன்று காலை 7:22 மணியளவில் வந்த அந்த மிரட்டல் மின்னஞ்சலில், "டெல்லி காலிஸ்தானாக மாறும்" என்ற வாசகத்துடன், "காலிஸ்தான் தேசிய இராணுவம்" என்ற பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. திங்கட்கிழமை மதியம் 1:11 மணிக்கு பள்ளிகளிலும், வரும் பிப்ரவரி 13-ஆம் தேதி மதியம் 1:11 மணிக்கு நாடாளுமன்றத்திலும் குண்டுவெடிப்பு நிகழும் என அதில் எச்சரிக்கப்பட்டிருந்தது.
அதிரடி சோதனையும் தேடுதல் வேட்டையும்
தகவல் கிடைத்தவுடன் டெல்லி போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டனர். நாடாளுமன்றம் மற்றும் பாதிக்கப்பட்ட பள்ளிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அங்குல அங்குலமாகச் சோதனை நடத்தப்பட்டது. இறுதியில் குண்டுகள் எதுவும் கண்டெடுக்கப்படாததால், இது ஒரு வெறும் 'புரளி' என்பது உறுதி செய்யப்பட்டது.
பள்ளிகளின் பட்டியல்:
- லோரெட்டோ கான்வென்ட் (டெல்லி கான்ட்)
- கேம்பிரிட்ஜ் பள்ளி (ஸ்ரீனிவாசன்புரி)
- வெங்கடேஷ்வர், சி.எம் மற்றும் பால பாரதி பள்ளிகள் (ரோகிணி)
- இந்தியன் பள்ளி (சாதிக் நகர்)
- டிடிஏ பள்ளி (ஐஎன்ஏ)
- கேம்பிரிட்ஜ் பள்ளி (நியூ பிரண்ட்ஸ் காலனி)
மிரட்டல் வந்தவுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு, பள்ளி வாகனங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டன.
போலீசார் விசாரணை
கடந்த சில மாதங்களுக்கு முன்பும் இதே போன்ற மிரட்டல்கள் வந்ததைச் சுட்டிக்காட்டிய போலீசார், தற்போது மின்னஞ்சல் அனுப்பிய நபரைக் கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பொது மக்கள் தேவையற்ற பீதி அடைய வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்புமாறும் டெல்லி காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
