பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவிலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள ஜெகனாபாத் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு குருகுலப் பள்ளியில், கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி 5 வயது சிறுவன் ஒருவன் விடுதியில் தங்கிப் படிப்பதற்காகச் சேர்க்கப்பட்டான். ஆனால், பள்ளியில் சேர்ந்த ஐந்தே நாட்களில் (ஏப்ரல் 6), அந்தச் சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளான். தனது மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு அந்தத் தாய் தற்போது போராடி வருவது அம்மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளியிலிருந்து வந்த அழைப்பு
சிறுவனின் தந்தை அஜய் குமார் சர்மா அளித்துள்ள புகாரின்படி, ஏப்ரல் 6-ஆம் தேதி அதிகாலை 5:20 மணியளவில் பள்ளியின் தாளாளர் தருண் குமார் தொலைபேசியில் அழைத்து, சிறுவன் ஆசு (Ashu) உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பதறியடித்துக்கொண்டு தனியார் மருத்துவமனைக்குச் சென்ற தந்தை, தனது மகன் ஐசியூ (ICU) வார்டில் உயிருக்குப்போராடிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். சிறுவனின் உடலில் கொடூரமான வெட்டுக் காயங்கள் இருந்ததைக் கண்டு தந்தை கதறியுள்ளார்.
கொடூரமான காயங்கள்
மருத்துவர்களின் முதற்கட்ட சோதனையில், சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. சிறுவனின் கழுத்து அறுக்கப்பட்டிருந்ததுடன், பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டு, வயிறு, கன்னம் மற்றும் புருவம் என உடல் முழுவதும் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டுக் ஆழமான வெட்டுக்காயங்கள் இருந்தன. மேல் சிகிச்சைக்காகப் பாட்னா கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்தத் தாக்குதலில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருக்கலாம் என்றும், கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
விடுதியில் நடந்தது என்ன?
உயிரிழந்த சிறுவனின் அண்ணன் ரிஷுவும் அதே பள்ளியில் பயின்று வருகிறான். அவன் அளித்த தகவலின்படி, சம்பவத்தன்று இரவு தாளாளர் தருண் குமார், சிறுவன் ஆசுவை தனது அறையில் தன்னுடன் தூங்குவதற்காக அழைத்துச் சென்றதாகத் தெரிவித்துள்ளான். இது தாளாளர் மீதான சந்தேகத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்களும் கிராம மக்களும் சிறுவனின் உடலுடன் பாட்னா - கயா தேசிய நெடுஞ்சாலையை முடக்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
காவல்துறை நடவடிக்கை
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாகப் பள்ளியின் தாளாளர் தருண் குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், ஒரு ஆசிரியர் மற்றும் இரு பெண் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. கொலை, கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்தப் பள்ளிக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். கல்வி கற்க அனுப்பிய இடத்தில் பிஞ்சுக் குழந்தை இவ்வளவு கொடூரமாகக் கொல்லப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
