பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த மருத்துவ தம்பதிக்கு, நீண்ட காலத்திற்குப் பிறகு மகப்பேறு கிடைத்தது. 33 வயதில் கர்ப்பமான அந்தப் பெண்ணுக்கு செய்யப்பட்ட வழக்கமான பரிசோதனைகளில், கருவில் இருந்த குழந்தைக்கு அரிதான பிறவி இதயக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இந்த குறைபாடு காரணமாக நுரையீரலிலிருந்து வரும் ஆக்சிஜன் நிறைந்த ரத்தம் இதயத்திற்கு சரியான முறையில் செல்லாத நிலை ஏற்பட்டது.
இத்தகைய பிரச்சினைக்கு உடனடி அறுவை சிகிச்சை அவசியம் என டெல்லியில் உள்ள ஒக்லா பகுதியிலுள்ள போர்டிஸ் மருத்துவமனை இருதய நிபுணர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, சிகிச்சைக்கு வசதியாக பெற்றோர் அந்த மருத்துவமனைக்கு அருகில் குடியேறி, கர்ப்ப காலம் முழுவதும் குழந்தையின் நிலைமை கவனிக்கப்பட்டது.
பின்னர் பெண் குழந்தை பிறந்ததும் சுவாசக்குறைபாடு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் வைத்ததுடன், தேவையான பரிசோதனைகள் மூலம் இதயக் குறைபாடு உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பிறந்த அடுத்த நாளே அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
சுமார் நான்கு மணி நேரம் நீடித்த இந்த அறுவை சிகிச்சையின் போது, ஆக்சிஜன் நிறைந்த ரத்த ஓட்டம் இதயத்தின் இடதுபுறம் செல்லும் வகையில் திருத்தப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்து குழந்தை உயிர் காக்கப்பட்டது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு 11 நாட்கள் மருத்துவமனையில் கண்காணிக்கப்பட்ட குழந்தை, நலமடைந்ததையடுத்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிறந்த உடனேயே இதய அறுவை சிகிச்சை செய்வது மிகவும் சவாலான ஒன்றாக கருதப்படும் நிலையில், அதை திறம்பட மேற்கொண்ட டெல்லி மருத்துவர்களின் செயல் பாராட்டுக்குரியது.
