ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்ற ஆட்டோ ஓட்டுநர், தனது மூத்த மகனின் கல்லூரி படிப்புக்காக அவர் கேட்டபடியே ஒரு லட்ச ரூபாய்க்கும் அதிக விலையுள்ள பைக்கை மாதத் தவணையில் வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால், பைக் கைக்கு வந்தவுடன் அந்த இளைஞரின் செயல்பாடுகள் முற்றிலும் மாறின. போக்குவரத்து விதிகளை மதிக்காமல் அதிவேகமாகச் செல்வது மற்றும் நண்பர்களுடன் நீண்ட தூரம் ஊர் சுற்றுவதையுமே அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனால் மகனின் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத் தகவல்கள் தந்தையின் செல்போனுக்கு அடிக்கடி வந்து எரிச்சலூட்டின.
விபத்தும் தந்தையின் ஆவேசமும்
இதற்கிடையில், மகன் அதிவேகமாகச் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைய, சந்திரசேகர் சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு செய்து அவருக்குச் சிகிச்சை அளித்துள்ளார். மேலும், சேதமடைந்த பைக்கைச் சரிசெய்ய கூடுதலாக 20 ஆயிரம் ரூபாயும் செலவிட்டுள்ளார். இருப்பினும், உடல்நிலை தேறிய பிறகும் மகனின் போக்கில் எந்த மாற்றமும் ஏற்படாமல் மீண்டும் பழையபடியே ஆபத்தான முறையில் பைக் ஓட்டியுள்ளார். இதனால் கடும் ஆத்திரமடைந்த தந்தை சந்திரசேகர், நேற்று ஒரு மைதானத்தில் வைத்து அந்த பைக்கின் மீது பெட்ரோல் ஊற்றி தீயிட்டுக் கொளுத்தினார். இந்தச் சம்பவம் குறித்து பெந்துர்த்தி காவல்துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
