பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் உள்ள ஷிதாலா தேவி கோவிலில் இன்று ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி 8 பெண் பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சைத்ர மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமை மற்றும் மகாவீர் ஜெயந்தி என்பதால், மாக்தா கிராமத்தில் உள்ள இந்த கோவிலில் வழக்கத்தை விட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சாமி தரிசனத்திற்காக வரிசையில் நின்றபோது, ஒரு சிலர் முண்டியடித்துக் கொண்டு முன்னேற முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் காயமடைந்த பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் நிவாரணமாக அறிவித்துள்ளார். அதேபோல் பீகார் மாநில அரசு உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 6 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளது. சம்பவ இடத்தில் போதுமான போலீஸ் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததே இந்த விபத்திற்கு முக்கிய காரணம் என நேரில் பார்த்த பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
