உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த 71 வயதான அசோக் பாஹர், இந்த வயதில் நீட் தேர்வு எழுதி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இவர் ஏற்கனவே இந்திய மருந்து நிறுவனத்தில் (IDPL) சந்தைப்படுத்தல் பிரிவுத் தலைவராகவும், வெளியுறவுத்துறையில் ஆலோசகராகவும் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். இவரது தந்தை லக்னோவில் புகழ்பெற்ற மருத்துவர், மனைவி மஞ்சு பாஹர் ஒரு மகப்பேறு மருத்துவர். இப்படித் தனது குடும்பத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவர்களாக இருந்தும், அசோக் பாஹரால் இளமையில் மருத்துவ நுழைவுத் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. தனது மகன் ஒரு மருத்துவராக வேண்டும் என்ற அவரது தாயின் நீண்ட கால கனவை நிறைவேற்றவே இந்த வயதில் அவர் மீண்டும் புத்தகங்களைக் கையில் எடுத்துள்ளார்.
நிபுணராகும் லட்சியமும் சமூக வலைதள விவாதமும்
வெறும் பட்டத்திற்காக மட்டும் அசோக் பாஹர் தேர்வு எழுதவில்லை; அவர் மருத்துவ படிப்பை முடித்து, கல்லீரல் நோய் நிபுணராக (Hepatology) மாறி மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற தெளிவான இலக்கைக் கொண்டுள்ளார். 71 வயதில் இவர் தேர்வு எழுதும் செய்தி இணையதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி, பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அசோக் பாஹரின் இந்த அசாத்தியமான முயற்சியைப் பலரும் பாராட்டி ஊக்கப்படுத்தி வரும் வேளையில், மற்றொரு தரப்பினர் இது ஒரு இளைஞரின் மருத்துவக் கல்வி வாய்ப்பைப் பறிக்கும் செயல் என்றும், இந்த வயதில் மருத்துவப் படிப்பு அவசியமற்றது என்றும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
