தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. 2018ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள், பத்தாவது நாளாக நேற்று விசாரணைக்கு வந்தன.
2018 ம் ஆண்டு, அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோவிலுக்குள் நுழையலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது பாரம்பரிய நடைமுறைகளுக்கு எதிரானதாக இருந்ததால் பரவலான விவாதத்தையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. மேலும் இந்நிலையில் இரு பெண்கள் சபரி மலைக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
இதனை குறித்து நேற்று நடந்த வழக்கில், மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் வாதிடுகையில், பெண்களுக்கு கோவில் நுழைவை மறுப்பது அரசியல் சாசன உரிமைக்கு எதிரானது என கூறினார். 10 முதல் 50 வயது வரை பெண்களைத் தடுக்குவது, அவர்களின் வாழ்நாளின் முக்கியமான காலத்தை மறுக்கும் செயல் என்றும்,மேலும் இந்திய சட்டப்பிரிவு 25(1) ன் கீழ் அனைவருக்கும் வழிபாட்டு உரிமை உண்டு என்றும் வலியுறுத்தினார். மேலும் இரு பெண்கள் சபரிமலைக்கு சென்றதை தொடர்ந்து, அங்கு அவர்கள் தடுக்கப்பட்டதுடன், சமூகத்திலும் எதிர்ப்பு, அவமதிப்பு போன்ற அனுபவங்களை எதிர்கொண்டதாகவும் தெரிவித்தார்.
இந்த வாதத்திற்கு பதிலளித்த நீதிபதிகள், குறிப்பிட்ட பெண்கள் 10 முதல் 50 வயது வரம்பு காரணமாகவே தடுக்கப்பட்டனர் எனக் குறிப்பிட்டனர். அதனை தொடர்ந்து நீதிபதி B. V. நாகரத்னா , “ஐயப்பனின் உண்மையான பெண்பக்தர்கள் 50 வயது வரை காத்திருப்பார்கள்” என்று குறிப்பிட்டார். மேலும், நாட்டின் கலாச்சாரம் மற்றும் மத மரபுகளை புறக்கணிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
நீதிபதி அஹசனுதீன் அமானுல்லா, ஒரு குறிப்பிட்ட தெய்வத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அதன் ஆச்சாரங்களை எப்படி நிராகரிக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். மேலும் ஒருவரின் உரிமை, மற்ற பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதனிடையே இந்த வழக்கின் போது, இந்த விவகாரத்தில் உரிமை கோருவது உண்மையான பக்தரா அல்லது நாத்திகரா என்ற கேள்வியையும் நீதிமன்றம் எழுப்பியது. மேலும் வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தென்மாநில கோவிலின் ஆச்சாரங்களில் தலையிடுவது தொடர்பாகவும் நீதிபதிகள் பரிசீலனை தேவையெனக் குறிப்பிட்டனர்.
இவ்வாறு பல கேள்விகளை எழுப்பியதோடு, இந்த வழக்கின் மேலான விசாரணையை வரும் மே 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்தனர்.
