ஆந்திரப் பிரதேசம் காக்கிநாடா மாவட்டம் சமர்லகோட்டா மண்டலத்தில் உள்ள வெட்லபாலம் கிராமத்தில் இயங்கி வந்த சூர்யா பட்டாசு உற்பத்தி ஆலையில் இன்று (பிப்.28) பிற்பகல் பயங்கரமான வெடிவிபத்து நிகழ்ந்தது. சுமார் 20 தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது ஏற்பட்ட இந்தத் திடீர் விபத்தில், 15 பேர் உயிரிழந்துள்ளனர். வெடிவிபத்தின் தீவிரத்தன்மையால் சடலங்கள் அருகில் இருந்த நெல் வயல்களில் சிதறிக் கிடந்தன. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரோன் மூலம் மீட்புப் பணி தீவிரம்
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் மற்றும் காவல் துறையினர், ட்ரோன்களைப் பயன்படுத்தி சிதறிக் கிடக்கும் உடல்களை மீட்டு வருகின்றனர். காயமடைந்தவர்கள் உடனடியாக காக்கிநாடா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆந்திர உள்துறை அமைச்சர் வாங்கலப்புடி அனிதா மீட்புப் பணிகளை நேரடியாகக் கண்காணித்து வருகிறார்.
இந்த பட்டாசு ஆலை அடபால வீரபாபு என்பவருக்குச் சொந்தமானது. இந்த ஆலைக்கு 2027-ஆம் ஆண்டு வரை செயல்படுவதற்கான உரிய உரிமம் இருந்தது என காவல்துறை கண்காணிப்பாளர் ஜி.பிந்து மாதவ் தெரிவித்துள்ளார். தீயணைப்பு வாகனங்கள் கொண்டுவரப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
