தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எட்டயபுரம் அருகே குளத்துள்வாய்பட்டியில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் 45 குடும்பங்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசு புதிய வீடுகளைக் கட்டிக் கொடுத்தது. இதன் பிறகு, முகாம்வாசிகளுக்கும் அப்பகுதி விவசாயிகளுக்கும் இடையே நிலங்களுக்குச் செல்வது தொடர்பாகத் தொடர் மோதல்கள் ஏற்பட்டு வந்தன. குறிப்பாக, அப்பகுதியில் போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்றும், காலி செய்யப்பட்ட பழைய ஷெட்களை விவசாயக் களமாகப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை தோல்வியும் வாக்குப்பதிவு பாதிப்பும்
வருவாய்த் துறையினர் மற்றும் வட்டாட்சியர் முன்னிலையில் பலமுறை பேச்சுவார்த்தைகள் நடந்தும் சுமுக முடிவு எட்டப்படவில்லை. இதற்கிடையே, கடந்த 17-ஆம் தேதி விவசாயப் பாதையைச் சீரமைத்த விவகாரத்தில் இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது. இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமை அப்புறப்படுத்தினால் மட்டுமே தேர்தலில் பங்கேற்போம் என மக்கள் உறுதியாகத் தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக, இன்று தேர்தல் தொடங்கிய நிலையில் குளத்துள்வாய்பட்டி, குமாரகிரி, சோத்துநாயக்கன்பட்டி மற்றும் அம்மாமடம் ஆகிய நான்கு கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்தனர். 983 வாக்காளர்களைக் கொண்ட வாக்குச்சாவடியில், காலை 11 மணி நிலவரப்படி வெறும் 8 பேர் மட்டுமே வாக்களித்ததால் மையம் வெறிச்சோடி காணப்பட்டது. அதிகாரிகள் மற்றும் காவல்துறையின் அலட்சியமே இந்தப் பிரச்சினைக்குக் காரணம் எனத் தெரிவித்துள்ள மக்கள், தங்கள் வீடுகளில் கருப்புக் கொடிகளைக் கட்டி தற்போதைய தேர்தலை முழுமையாகப் புறக்கணித்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
