குழந்தைகளை வைத்து பரப்புரை செய்ததாக விஜய் மீது தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சுமத்தி வரும் நிலையில் இந்த விவகாரத்தில் தவெக தொண்டர்கள் கொந்தளித்துள்ளனர்.
குழந்தைகளிடம் ஓட்டு கேட்ட விஜய்
ஏப்ரல் 21ம் தேதி நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தல் பரப்புரையின் கடைசி நாளில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. அவர் குழந்தைகளிடம் உங்கள் பெற்றோரை தவெகவுக்கு வாக்களிக்க சொல்லுங்கள் என்ற வேண்டுகோளை முன்வைத்தார். ஏற்கனவே வீட்டில் இருக்கும் குழந்தைகள் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் விஜய்க்கு தான் ஓட்டு போட வேண்டும் என சத்தியம் வாங்கும் வீடியோக்களும், தவெகவுக்கு ஆதரவாக பரப்புரை செய்யும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இப்படியான நிலையில் விஜயின் பேச்சு தேர்தல் நேரத்தில் கவனிக்கப்படாத நிலையில் வாக்குப்பதிவுக்குப் பிறகு அவருக்கு எதிராகத் திரும்பியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. விஜய்க்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
தேர்தல் விதிமுறை சொல்வது என்ன?
விதிகளின்படி இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் பரப்புரைகளில் குழந்தைகளை பயன்படுத்தக்கூடாது என்பது விதியாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் துண்டு பிரசுரங்கள் வழங்குவது தொடங்கி போஸ்டர் ஒட்டுவது, பேரணிக்கு அழைத்து செல்வது, சின்னங்களை குழந்தையின் கையில் ஏந்த செய்வது, கட்சி அல்லது சின்னம் பொருந்திய ஆடைகளை அணிவிப்பது என எதையுமே குற்றமாக தெரிவித்துள்ளது.
விஜய் மீதான இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு தவெக தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வரவில்லை. உதாரணத்துக்காகச் சொன்ன ஒரு வார்த்தையைத் திரித்து அரசியல் செய்கிறார்கள் என்பதே கட்சி வட்டாரங்களின் பதிலாக உள்ளது. அதேபோல் விஜய்க்கு அனைத்து தரப்பு ஆதரவு இருப்பதைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாமல் இத்தகைய சம்பவங்கள் நிகழ்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
மற்றவர்கள் செய்வது மட்டும் சரியா?
மேலும் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்ட வாகனத்தில் ஒரு சிறுவனை ஏற்ற, அச்சிறுவனை திமுகவுக்கு ஓட்டு கேட்க சொன்னது, இன்னும் சில சிறுவர்கள் திமுகவுக்கு ஆதரவாக வாக்கு கேட்கும் வீடியோக்கள் கூட வெளியானது. மேலும் பல அரசியல் கட்சிகள் நோட்டீஸ் கொடுப்பது, கொடி பிடிப்பது, பரப்புரை கூட்டத்துக்கு ஆள்சேர்ப்பது வரை சிறுவர்கர் பணத்துக்காக சட்டத்தை மீறி பணியமர்த்தப்படுகின்றனர். அதை எல்லாம் தேர்தல் ஆணையம் கண்டு கொள்வதில்லை என தவெகவினர் ஆதங்கப்படுகின்றனர்.
எனினும் தேர்தல் களத்தில் உணர்ச்சிவசப்பட்டு பேசுவது தலைவர்களுக்கு இயல்பு. ஆனால் அந்தப் பேச்சின் ஒவ்வொரு வார்த்தையும் பின்னாளில் ஆயுதமாக மாறலாம் என்பதற்கு விஜய் போன்ற ஒரு பெரிய பிம்பத்தின் கருத்துகளே சாட்சியாக அமைந்துள்ளது. தேர்தல் முடிந்த பிறகு 'டைம் பாம்' போல வெடிக்க காத்திருக்கும் இந்த விவகாரம் விஜய்க்கு புதிய நெருக்கடியைக் கொடுக்குமா? அல்லது வழக்கம் போல கானல் நீராகுமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.
