தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று திருப்பூர் மாவட்டத்தில் தனது வேட்பாளர்களை ஆதரித்துப் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். அவிநாசி மற்றும் பெருமாநல்லூர் பகுதிகளில் நடைபெறும் இந்த வாகனப் பிரச்சாரத்திற்காகச் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்த விஜய்க்கு, ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். கோவை அவிநாசி சாலையில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் காரணமாகப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு, உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.
கூட்ட நெரிசலில் சிக்கிய வேட்பாளர்
விஜய்யை வரவேற்கச் சிட்ரா பகுதியில் காத்திருந்த சூலூர் தொகுதி தவெக வேட்பாளர் சுகுமாரன், மக்கள் கூட்டத்தில் சிக்கி எதிர்பாராத விதமாக மயக்கமடைந்தார். உடனடியாக அவரது ஆதரவாளர்கள் அவரை மீட்டு முதலுதவி அளித்தனர். மறுபுறம், திருப்பூரின் பெருமாநல்லூர் சந்திப்பில் மதியத்திலிருந்தே விஜய்யின் வருகைக்காகத் தொண்டர்களும் பொதுமக்களும் கடும் வெயிலில் காத்திருந்தனர். மாலை 4 மணி கடந்தும் விஜய் அந்த இடத்திற்கு வந்து சேராததால், வெயிலின் தாக்கத்தைத் தாள முடியாமல் அங்கிருந்தவர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.
மருத்துவமனையில் அனுமதி
இதில் 8 பெண்கள் உட்பட மொத்தம் 14 பேர் மயக்கமடைந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் அனைவரும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். தலைவர் வருவதற்கு முன்னரே தொண்டர்கள் மயக்கமடைந்ததால் பரப்புரை நடைபெறும் இடத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. வருகின்ற ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில், பெரம்பூர் மற்றும் திருச்சி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடும் விஜய், தமிழகம் முழுவதும் தனது வேட்பாளர்களுக்காகத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறார்.
