2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மைக்கு குறைவான இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், பிற கட்சிகளின் ஆதரவை கேட்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தல் திருவிழா நிறைவு பெற்றுள்ளது. ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் முதல் முறையாக களம் கண்ட விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று மகத்தான சாதனை படைத்துள்ளது. அதே சமயம் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 73 தொகுதிகளிலும், அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 53 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆட்சி அமைக்க 118 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் விஜய் கட்சி 108 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதில் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளார். விதிகளின்படி ஏதேனும் ஒரு தொகுதியில் அவர் ராஜினாமா செய்ய வேண்டும். இப்படியான சூழலில் மீதமுள்ள இடங்களுக்கு திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் ஆதரவை நாட விஜய் முடிவெடுத்துள்ளார்.
கூட்டணி கட்சிகளுக்கு ஜாக்பாட்
இந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் 5 தொகுதிகளிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தலா இரண்டு தொகுதிகளிலும், தேமுதிக ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக 4 தொகுதிகளிலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், பாஜக ஆகிய இரு கட்சியும் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றிருக்கிறது.
இந்த நிலையில் விஜய் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க தவெகவுக்கு இன்னும் 10 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. ஏற்கனவே விஜய் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருகிறேன் என அழைத்தும் எந்த கட்சியும் அவர் ஜெயிக்க மாட்டார் என நினைத்து கூட்டணி வைப்பதற்கு மறுத்தது. தேர்தல் களத்தில் கடுமையாக விமர்சித்தது. ஆனால் விஜய் ஜெயித்தார்.
தற்போது மீண்டும் விஜய் அதே கட்சிகளின் கதவை தட்டியுள்ளார். இதனிடையே இன்று காலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது விஜய்க்கு ஆதரவு கொடுப்பது உள்ளிட்ட எந்த முடிவாக இருந்தாலும் மூன்று கட்சிகளும் சேர்ந்து கலந்தாலோசித்து தெரிவிப்போம் என கூறிவிட்டு சென்றனர்.
அதே சமயம் காங்கிரஸ் கட்சி விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பான முடிவை எடுப்பதற்கு மாநில நிர்வாகிகள் தேசிய தலைமைக்கு அதிகாரம் அளித்துவிட்டது. பாட்டாளி மக்கள் கட்சியும் இந்த விஷயத்தில் தீவிர ஆலோசனையில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் இடம் விஜய்க்கு ஆதரவு கொடுப்பது பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தாங்கள் தற்போது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம் என தெரிவித்தார். இதனால் அவர் ஆதரவு கொடுக்கமாட்டார் எனவும் சொல்லப்படுகிறது.
திமுக, அதிமுக செய்ய நினைக்காத ஒன்று
இதில் திமுக கூட்டணி இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் விஜய்க்கு ஆதரவு கொடுக்கலாம் என கூறப்படுகிறது. அதற்கு காரணம் தேர்தலில் தோல்வியுற்றிருந்தாலும் கூட்டணி கட்சிகள் விஜய்க்கு ஆதரவாக சென்றாலும் திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்ளும். அதன் காரணமாக இந்த முடிவு மேற்கொள்ளப்படலாம் என சொல்லப்படுகிறது.
அதே சமயம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவதாக சொன்ன விஜயிடம் ஆதரவு தெரிவிக்கும் கட்சிகள் அமைச்சரவையிலும் பங்கு கேட்கலாம். அதனை விஜய் பரிசீலித்து ஒரு முடிவு எடுக்கலாம். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பது இதுவரை காணக் கிடைக்காத ஒன்றாக இருக்கும் நிலையில் அதனை இந்த முறை செயல்படுத்தும் அரிய வாய்ப்பு விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிக்கு அமைந்துள்ளது.
அதே சமயம் எந்த காலத்திலும் திமுக மற்றும் அதிமுக தங்களது கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் தராத நிலையில் தமிழக வெற்றிக் கழகம் அதனைத் தந்து அவர்களை அழகு பார்க்கும் எனவும், இதன் மூலம் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை நாம் காண முடியும் எனவும் அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
