தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் எஸ்டிபிஐ ஆகிய கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன. விசிக-வுக்கு ஒதுக்கப்பட்ட 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்தார். அதன்படி, காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் நேரடியாகக் களம் காண்கிறார். இவருடன் திண்டிவனத்தில் வன்னியரசு, கள்ளக்குறிச்சியில் மாலதி, பண்ருட்டியில் அப்துல் ரகுமான், அரக்கோணத்தில் எழில் கரோலினா, செய்யூரில் சிந்தனைச் செல்வன், திருப்போரூரில் பன்னீர்தாஸ் மற்றும் பெரியகுளத்தில் ஆற்றல் அரசு ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 5 தொகுதிகளுக்கான பட்டியலை அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டார். இதில் தற்போதைய எம்எல்ஏ-க்களான க.மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி) மற்றும் டி.ராமச்சந்திரன் (தளி) ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் பவானிசாகரில் பி.எல்.சுந்தரம், திருப்பூர் வடக்கில் ரவி (எ) எம்.சுப்பிரமணியம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் பி.மகாலிங்கம் ஆகியோர் கதிர்அரிவாள் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்களை அறிவித்த பின் பேசிய மு.வீரபாண்டியன், கட்சியின் பல்வேறு நிலைகளில் பணியாற்றிய இவர்களுக்கு ஒருமனதாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், ஐந்து தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம் என்றும் உறுதிபடத் தெரிவித்தார். மேலும், திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நன்னிலம் தொகுதியில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் முகமது முபாரக் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
