Vaiko Vs Durai Vaiko | “பதவி பிச்சை” - துரையால் சரிவு நிச்சயம்.. கொதிக்கும் வைகோ ஆதரவாளர்கள்!

துரைக்கு மதிமுக திமுக கூட்டணியில் இருப்பதில் கொஞ்சமும் உடன்பாடில்லை என சொல்லப்படுகிறது. எனவே அடுத்த தேர்தலுக்குள் நிச்சயம் அவர் முடிவெடுக்கும் அதிகாரத்தைப் பெறுவார். அப்போது மதிமுக என்னாகும் என்ற கேள்வியே மேலோங்கி நிற்கிறது.

G

எழுதியவர்

2 மணி நேரத்திற்கு முன்
Vaiko Vs Durai Vaiko | “பதவி பிச்சை” - துரையால் சரிவு நிச்சயம்.. கொதிக்கும் வைகோ ஆதரவாளர்கள்!

மு.க.ஸ்டாலினுக்கே டஃப் கொடுப்பவர் என அரசியல் களத்தில் கருதப்பட்டவர் வைகோ. அவரின் மறுமலர்ச்சி திராவிடக் கழகம் கட்சி கரையான் அரிப்பை போல மெல்ல மெல்ல காணாமல் போய் கொண்டிருக்கிறது என அரசியல் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. அதற்கு காரணமாக கைகாட்டப்படுபவர் துரை வைகோ.

வைகோவின் மகனாக அறியப்பட்டு, மதிமுகவின் முதன்மை செயலாளராக முன்மொழியப்பட்டு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர். மதிமுகவின் அடுத்த தலைமையாக உருவெடுக்கும் முன்னரே அக்கட்சியின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறார் என தொண்டர்களின் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கியுள்ளார்.

மதிமுகவுக்குள் துரை வைகோ வருகை

வைகோ தமிழ்நாடு அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத ஒரு தலைவர். கருணாநிதியின் வலதுகரமாக செயல்பட்டு வந்த அவர் சில நிகழ்வுகள் காரணமாக அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டு மதிமுக என்னும் இயக்கத்தை தொடங்கினார். வைகோ திமுகவின் வாரிசு அரசியலை கடுமையாக எதிர்த்தார். அதே சமயம் இலங்கை தமிழர்கள் இனப்படுகொலையில் காரணமான காங்கிரசுடன் கூட்டணி வைத்த திமுகவை சரமாரியாக விமர்சித்தார். ஆனால் இன்றைக்கு அதே திமுக காங்கிரஸ் கூட்டணியில் அவரின் மதிமுக கட்சியின் ஒரு அங்கம் வகிக்கிறது.

ஒரு காலத்தில் வாரிசு அரசியலை எதிர்த்த வைகோ தனது மகன் துரையை தீவிர அரசியலுக்குள் கடந்த 2021 ஆம் ஆண்டு இழுத்து வந்தார். கட்சியின் பல்வேறு நிகழ்வுகளில் துரை வைகோ அதற்கு முன்னால் பங்கேற்று இருந்தாலும் அதிகாரப்பூர்வமாக 2021ல் மதிமுகவின் தலைமை கழக செயலாளராக பதவியேற்றார். கொரோனா காலத்தில் தொண்டர்கள் அழைத்ததால் தான் அரசியலுக்கு வந்ததாக தெரிவித்திருந்தார். ஆனால் துரை வைகோ வந்ததிலிருந்து மதிமுக கட்சியில் பல்வேறு பிரச்சனைகள் வெடித்து வருகிறது.

முதல் தேர்தலிலேயே சம்பவம்

துரை வைகோ மதிமுகவில் பொறுப்பேற்கும் போது அக்கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்திருந்தது. அதனைத் தொடர்ந்து 2024 மக்களவைத் தேர்தலில் துரை திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த மதிமுக உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையை மு.க.ஸ்டாலின் வலியுறுத்திய நிலையில் துரை அதனை எதிர்த்தார்.

தான் தீப்பெட்டி சின்னத்தில் தான் போட்டியிடுவேன் என பிடிவாதமாக இருந்து அதில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த தேர்தல் பரப்புரையின் போது திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அப்போது மேடையில் உணர்ச்சிவசப்பட்டு துரை வைகோ அழுதார். இதனைத் தொடர்ந்து மதிமுகவின் வைகோவின் வலதுகரமாக செயல்பட்டு வந்த மல்லை சத்யா - துரை இடையே பிரச்சனை வெடித்தது.

தன்னைவிட மல்லை சத்யாவுக்கு கட்சிக்குள் இருந்த செல்வாக்கு அவருக்கு பெரும் பிரச்சினையாக அமைந்தது இதனால் இருவருக்கும் இடையே கருத்து முதல் ஏற்பட்டு பலமுறை வைகோவால் சமாதானம் செய்யப்பட்டது. ஆனால் ஒரு கட்டத்தில் வைகோவே மகனுக்காக சமரசமாகி மல்லை சத்யாவுக்கு எதிராக பேச அவர் கட்சியை விட்டு விலகி திராவிட வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.

உதயசூரியன் சின்னத்தில் மதிமுக

இந்த நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில் மூன்று தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும் ஒரு தொகுதியில் சொந்த சின்னத்திலும் போட்டியிட முதலில் முடிவு செய்யப்பட்டது. கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் ஆபத்து இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் நான்கு தொகுதிகளிலும் வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

அதேபோல் சங்கரன்கோவிலில் நடந்த தேர்தல் பரப்புரையில் பணம் வாங்கிக் கொண்டு யார் நல்லவர்களோ அவர்களுக்கு ஓட்டு போடுங்கள். என தெரிவித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. நீங்கள் எப்போது பணம் வாங்குவதை நிறுத்துகிறீர்களோ அப்போதுதான் அரசியல் இயக்கங்களும் திருந்தும் என அந்த இடத்திலேயே துரை வைகோ அதிரடியாக பேசினார்.

பதவி பிச்சை என வார்த்தையை விட்ட துரை

இந்த நிலையில்தான் கடந்த மார்ச் 28ஆம் தேதி மறைந்த ஈரோடு கணேச மூர்த்தியின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது அப்போது மதிமுக தலைமையகத்தில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்த நிகழ்வு முடிந்ததும் தேர்தல் நிலவரம் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் பற்றிய பேச்சு வார்த்தை எழுந்துள்ளது. அதில் மொடக்குறிச்சி தொகுதியில் தெற்கு மாவட்டச் செயலாளரான கோபாலை நிறுத்தலாம் என நிர்வாகிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

அதற்கு சற்றும் எதிர்பாராத விதமாக பதிலளித்த துரை வைகோ, பதவி, பொறுப்பு எல்லாம் கட்சி போடும் பிச்சை. கொடுத்த வாங்கிக்கோங்க.. இல்லைன்னா கடந்து போங்க.. என சொல்ல தேர்தல் நேரம் என்பதால் அந்த வருத்தத்தை மனதில் வைத்துக்கொண்டு எதுவும் பேசாமல் சென்றுள்ளனர். இந்த நிலையில் இரு தினங்கள் முன்பு கோபால் உட்பட 75 நிர்வாகிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். பெரியாரை உயர்த்திப் பிடிக்கும் கட்சியில் அவர் பிறந்த மண்ணில் இருக்கும் எங்களுக்கு சுயமரியாதை இருக்காதா என தங்களுக்குரிய ஸ்டைலில் பதிலடியும் கொடுத்துள்ளனர். இதனால் துரை வைகோ ஆடிப்போயுள்ளார்.

இப்போதைக்கு கட்சியின் தொண்டர்களாக செயல்படுவோம். மறுபடியும் இப்படி துரை பேசினால் கட்சியே வேண்டாம் என சென்று விடுவோம் என சம்பந்தப்பட்ட நிர்வாகிகளின் ஆதரவாளர்கள் கொந்தளித்துள்ளனர். துரையின் செயல்பாடு வைகோ ஆதரவாளர்களிடையேயும் கோபத்தை தூண்டியுள்ளது. ஏற்கனவே அரசியல் களத்தில் நமக்கிருக்கும் எதிர்மறை பெயர்களுக்கிடையே துரை நிச்சயம் கட்சியை வளர்ப்பார் என எதிர்பார்த்தோம். ஆனால் அவரோ கட்சிக்கு கரையை உண்டாக்கும் வகையில் செயல்படுகிறார்.

கட்சி வளர வேண்டும் என்றால் இதை செய்யுங்க

துரைக்கு மதிமுக திமுக கூட்டணியில் இருப்பதில் கொஞ்சமும் உடன்பாடில்லை என சொல்லப்படுகிறது. எனவே அடுத்த தேர்தலுக்குள் நிச்சயம் அவர் முடிவெடுக்கும் அதிகாரத்தைப் பெறுவார். அப்போது மதிமுக என்னாகும் என்ற கேள்வியே மேலோங்கி நிற்கிறது. வைகோவுக்கு பின்னாலும் மதிமுக வலுவாக இருக்க வேண்டும் என்றால் துரை வைகோ அரசியலின் வளைவு நெளிவை எல்லாம் கற்க வேண்டும் என தொண்டர்கள் தரப்பில் அட்வைஸூம் வழங்கப்படுகிறது.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...