Udhayanidhi Stalin Vs Vijay | எதிர்க்கட்சி தலைவராகும் உதயநிதி.. விஜயை சமாளிப்பாரா? - இனிமேல் தான் ஆட்டமே!

ஸ்டாலின் இல்லாத சட்டமன்றத்தில் உதயநிதி எப்படி ஆளும் கட்சியாக மாறப்போகும் தமிழக வெற்றிக் கழகத்தினரை சமாளிக்க போகிறார் என்பதே சுவாரஸ்யமாக உள்ளது.

1 மணி நேரத்திற்கு முன்
Udhayanidhi Stalin Vs Vijay | எதிர்க்கட்சி தலைவராகும் உதயநிதி.. விஜயை சமாளிப்பாரா? - இனிமேல் தான் ஆட்டமே!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் மகத்தான வெற்றி பெற்றுள்ள நிலையில் திமுக இரண்டாம் இடம் பிடித்து எதிர்க்கட்சியாக மாறியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற நிலையில் மே 4ம் தேதியான இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த தேர்தலில் புதிதாக களம் இறங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பத்திலிருந்து முன்னிலையில் இருந்ததால் போட்டியாக இருந்த திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை ஒரு கணம் அதிர்ந்துதான் போனது. கள நிலவரம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு சாதகமாக மாற அக்கட்சி 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றது.

எதிர்க்கட்சியாக கடும் போட்டி

அதேசயம் எதிர்க்கட்சியாக யார் வரப்போகிறார்கள் எனத் தெரியாத அளவுக்கு திமுக மற்றும் அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவியது. ஆளும் கட்சியான திமுகவுக்கு இந்த தேர்தல் தோல்வி எதிர்பாராத ஒன்றாக அமைந்துள்ளது. அதேசமயம் திமுக தலைவரும் முதலமைச்சர் வேட்பாளருமான மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் தோல்வியடைந்த சம்பவம் பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.

உண்மையில் மு.க.ஸ்டாலினின் தோல்வியை எந்த ஒரு அரசியல் கட்சியின் தலைவர் தொடங்கி தொண்டர்கள் வரை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதேநேரத்தில் துணை முதல்வரும் சேப்பாக்கம் தொகுதி வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக மாறியுள்ள திமுகவில் எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உதயநிதியை வைத்து கேம் ஆடும் மு.க.ஸ்டாலின்

கருணாநிதியின் பேரன், மு.க.ஸ்டாலினின் மகன் என்ற அடையாளத்தோடு உதயநிதி தமிழ் சினிமா மூலம் மக்களுக்கு பரீட்சயமானார். அதனைத் தொடர்ந்து திமுகவில் இளைஞரணி செயலாளராக செயல்பட்டு வந்த அவர் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார்.

தொடர்ந்து திமுக ஆட்சியில் அவருக்கு விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில் அதற்கடுத்து அவருக்கு துணை முதல்வர் பதவியும் வழங்கப்பட்டது. இது எதிர்க்கட்சிகள் மற்றும் தமிழக மக்களிடையே சரமாரியாக விமர்சிக்கப்பட்டது.

இருந்தாலும் தனக்குப் பிறகு மகன் உதயநிதி தான் திமுகவுக்கு தலைமை ஏற்க வேண்டும் என்பதால் விமர்சனங்களை பொருட்படுத்தாமல் அவரை செதுக்க வேண்டிய சூழலுக்கு மு.க.ஸ்டாலின் தள்ளப்பட்டார். உதயநிதி மீது விமர்சனம் வரும் போதெல்லாம் அதனை அவரை வைத்து சரி செய்ய மு.க.ஸ்டாலின் முயன்றார்.

இப்படியான நிலையில் மிக குறுகிய காலத்திலேயே அரசியலுக்குள் நுழைந்து அமைச்சராகி, துணை முதல்வர் பதவி வரை அலங்கரித்த உதயநிதி ஸ்டாலின் அடுத்ததாக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்க உள்ளதாக சொல்லப்படுகிறது. உண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு என்பது கத்தி மேல் நடப்பதற்கு சமமாகும்.

உதயநிதிக்கு சூப்பர் சான்ஸ்

அதாவது ஆளும் கட்சி செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி, ஏதேனும் ஒரு பிரச்னையில் மக்களுக்கு எந்த பாதகமும் வராமல் ஆளும் அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு உறுதுணையாக செயல்படுவது வரை எதிர்க்கட்சியின் செயல்பாடு உள்ளது. அந்த வகையில் 2016 முதல் 2021 ஆம் ஆண்டு வரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் தனது பணியை மிகச் சிறப்பாக செய்ததால் மக்கள் அவரை 2021 ஆம் ஆண்டு முதலமைச்சராக தனிப்பெரும்பான்மை பலத்துடன் தேர்வு செய்தார்கள்.

அப்படி இருக்கும்போது எதிர்கால அரசியல் களம் விஜய் vs உதயநிதி என மாறிவிட்ட நிலையில் உதயநிதிக்கு இது நல்ல சான்ஸாக மாறியுள்ளது. இந்த ஐந்தாண்டு காலம் அவர் சிறப்பாக செயல்பட்டு மக்களுக்காக பணியாற்றினால் நிச்சயம் 2031 தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளது. ஸ்டாலின் இல்லாத சட்டமன்றத்தில் உதயநிதி எப்படி ஆளும் கட்சியாக மாறப்போகும் தமிழக வெற்றிக் கழகத்தினரை சமாளிக்க போகிறார் என்பதே சுவாரஸ்யமாக உள்ளது.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...