தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மகத்தான வெற்றி பெற்றுள்ள நிலையில் அக்கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றியை பதிவு செய்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. 85.10 சதவிகிதம் வாக்குகள் பதிவான நிலையில் அவை அனைத்தும் இன்று தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்ட 62 மையங்களில் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அதனைத் தொடர்ந்து இவிஎம் மிஷினில் உள்ள வாக்குகள் எண்ணப்பட்டது.
இதில் ஆரம்பம் முதலே விஜயின் தமிழக வெற்றி கழகம் பல்வேறு தொகுதிகளிலும் முன்னிலை பெற தொடங்கியது. ஆளும் கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் மிகப்பெரிய அளவில் முன்னிலை பெறுவதற்கு போராடி பல இடங்களில் வெற்றியைப் பறிகொடுத்தது.
தமிழ்நாடு அரசியல் களத்தில் புதிதாக தொடங்கப்பட்ட ஒரு கட்சியிடம் 75 மற்றும் 50 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்த திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற போராடியது ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் பேசுபொருளாக அமைந்துள்ளது.
இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற விஜய்
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டார். இந்த இரண்டு தொகுதிகளிலும் அவர் அபார வெற்றி பெற்றுள்ளார். திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர்களை விஜய் தோற்கடித்தார். விஜய் கட்சி ஒரு தொகுதியில் ஜெயிப்பது கடினம், வாக்கு பெறுவது கடினம், வாக்குகளை பிரிப்பார், வாக்குகள் விழாது என பல யூகங்கள் களத்தில் முன்வைக்கப்பட்டாலும் அதனை எல்லாம் துடைத்தெறிந்து தமிழக வெற்றிக் கழகம் எப்படிப்பட்ட வலிமையான கட்சி என்பதை விஜய் நிரூபித்துள்ளார்.
ஒரு தொகுதியை ராஜினாமா செய்யும் விஜய்
இந்த நிலையில் தேர்தல் ஆணைய சட்டப்படி ஒரு நபர் ஒரு தொகுதியில் மட்டுமே சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க முடியும். அப்படிப் பார்த்தால் விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் ஏதேனும் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும்.. அதன்படி விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் முறையாக ஆட்சி அமைக்க உள்ள நிலையில் சென்னை பெரம்பூர் தொகுதியில் தான் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தால் மக்களை எளிதாக சந்திக்கவும், அரசு நிர்வாகத்தை நடத்தவும் வசதியாக இருக்கும் என அவர் கருதுவதாக கூறப்படுகிறது.
திருச்சி கிழக்கு வேட்பாளர் இந்த நடிகையா
ஒருவேளை திருச்சி கிழக்கில் விஜய் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தால் அங்கு மீண்டும் இடைத்தேர்தல் நடத்தப்படும். அதில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராக யார் நிறுத்தப்பட போகிறார் என்று கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் விஜய் போட்டியிட்ட அந்த தொகுதியில் நடிகை த்ரிஷா வேட்பாளராக நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரும் தனக்கு நீண்ட காலமாகவே அரசியலில் ஆர்வம் இருக்கிறது என தெரிவித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் தனது பிறந்த நாளான இன்று திருப்பதிக்கு சென்று இருந்த த்ரிஷா சென்னை திரும்பியதும் நேராக விஜய் வீட்டிற்கு தான் வருகை தந்தார். அதனால் அடுத்த சில வாரங்களுக்குள் த்ரிஷாவுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது. ஒருவேளை த்ரிஷா திருச்சி கிழக்கு தொகுதியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் மக்கள் முடிவு என்னவாக இருக்கும் என்று எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
