2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் 233 தொகுதிகளில் வேட்பாளர்களைக் களம் இறக்கி தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. கட்சித் தலைவர் விஜய் அனைத்துத் தொகுதிகளிலும் நேரில் சென்று பிரச்சாரம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில மாவட்டங்களில் காவல்துறையின் அனுமதி மறுப்பு மற்றும் கட்சியின் திடீர் முடிவுகளால் பிரச்சாரக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் அதிருப்தியில் இருந்த தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், மக்களைக் கவரவும் தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ஹாலோகிராம் தொழில்நுட்பத்தை தவெக வேட்பாளர்கள் கையில் எடுத்துள்ளனர்.
ஏஐ மற்றும் ஹாலோகிராம் பிரச்சாரம்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொகுதியில் தவெக வேட்பாளர் தனது பிரச்சார வாகனத்தில் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். அதில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் விஜய் நேரில் நின்று பேசுவது போன்ற தத்ரூபமான அமைப்பை உருவாக்கி உள்ளனர். அந்த வீடியோவில், "தமிழக மக்கள் விசில் சின்னத்திற்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் அணு குண்டாக மாறும்" என்று விஜய் பேசுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. விஜய்யின் உருவ பொம்மைகள் மற்றும் இந்த நவீன தொழில்நுட்ப பிரச்சாரம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், பொதுமக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
