தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் முழுமையான தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற இந்தச் சிறப்பு நிகழ்வில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர். தனது கட்சியின் தொலைநோக்குப் பார்வைகள் மற்றும் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையின் முதல் பிரதியை, நாராயணன் என்ற விவசாயியிடம் வழங்கி விஜய் வெளியிட்டார். சாமானிய மக்களுக்கான ஆட்சியை முன்னெடுப்பதன் அடையாளமாக, ஒரு விவசாயியிடம் அறிக்கையை வழங்கியது அங்கிருந்தோரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பெண்கள் மற்றும் குடும்பங்களுக்கான சிறப்புச் சலுகைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் 'வெற்றி மகளிர் திட்டம்' மூலம் 60 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும், மணப்பெண்களுக்குத் தரமான பட்டுச் சேலையுடன் 8 கிராம் தங்கம் வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் நலன் கருதி 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயில்பவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும், மகளிர் சுய உதவிக் குழுக்களின் முன்னேற்றத்திற்காக ரூ.5 லட்சம் வரை வட்டி இல்லா கடன் வசதி செய்து தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுப் புரட்சி
மாணவர்களின் எதிர்காலத்தை வளர்க்கும் நோக்கில், பெருந்தலைவர் காமராஜர் பெயரில் 100 உலகத்தரம் வாய்ந்த பள்ளிகள் உருவாக்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை தரமான கல்வி வழங்கும் இலவச உண்டு உறைவிடப் பள்ளிகள் அமைக்கப்படும். உயர் கல்வி கற்கும் மாணவர்களின் கனவை நனவாக்க, இளங்கலை முதல் முனைவர் பட்டம் வரை பயில ரூ.20 லட்சம் வரை பிணையில்லா கல்விக் கடன் வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நவீனத் தொழில்நுட்பப் பயிற்சி மையங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் இயங்கும் இலவசப் போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.
அனைவருக்குமான உயர்தர மருத்துவக் காப்பீடு
தமிழகத்தைப் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவதே முதன்மையான நோக்கம் என்று குறிப்பிட்டுள்ள தவெக, பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு மன்றங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. சுகாதாரத் துறையில் மிகப்பெரிய மாற்றமாக, ஒரு குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வரையிலான 'யுனிவர்சல் ஹெல்த் இன்சூரன்ஸ்' காப்பீடு வழங்கப்படும். இதன் மூலம் புற்றுநோய், இருதய அறுவை சிகிச்சை மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை இலவசமாக மேற்கொள்ள முடியும். மேலும், ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆண்டுதோறும் இலவச உடல் பரிசோதனை மற்றும் மலிவு விலையில் மருந்துகள் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் நிதியுதவி
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 மற்றும் 12-ஆம் வகுப்பு அல்லது டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும். ஆண்டுதோறும் 5 லட்சம் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சியின் போது மாதம் ரூ.10,000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். 'முதல்வர் மக்கள் சேவை நண்பன்' என்ற திட்டத்தின் மூலம், அரசுத் திட்டங்களை மக்களின் வீட்டு வாசலுக்கே கொண்டு சேர்க்க ரூ.18,000 ஊதியத்தில் 5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். அரசுப் பணிகளுக்கான காலிப் பணியிடங்களை முறையாக நிரப்பக் கால அட்டவணை உருவாக்கப்பட்டு, வேலையில்லா நிலை முற்றிலும் ஒழிக்கப்படும் எனத் தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
