தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திமுக மற்றும் அதிமுக கூட்டணிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அரசியல் களத்தைச் சூடுபடுத்தியுள்ளன. இந்தத் தேர்தலில் முதன்முறையாகக் களமிறங்கும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், இளைய தலைமுறையினரின் வாக்குகள் மற்றும் 20 சதவீதத்திற்கும் அதிகமான வாக்கு வங்கியைப் பெறும் என எதிர்பார்க்கப்படுவதால் பெரும் கவனம் ஈர்த்துள்ளது. இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இன்று நடைபெறவிருந்த 234 தொகுதிகளுக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 110 வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வேட்பாளர் பட்டியல் இன்னும் முழுமையாகத் தயாராகாதது ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.
மேலும், இந்த நிகழ்ச்சிக்குக் காவல்துறையின் அனுமதி கிடைத்திருந்தாலும், தேர்தல் ஆணையத்தின் உரிய அனுமதி பெறப்படாதது மற்றும் சில தொழில்நுட்பக் காரணங்களால் இறுதி நேரத்தில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆர்வத்துடன் வந்திருந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பினர். எனினும், திட்டமிட்டபடி மார்ச் 29-ஆம் தேதி அதே இடத்தில் நடைபெறும் பிரம்மாண்டமான கூட்டத்தில் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் தலைவர் விஜய் நேரடியாக அறிமுகம் செய்து வைப்பார் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.
