திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் விஜய், நேற்று தனது தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரம்மாண்ட ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரித்தார். திருச்சி விமான நிலையத்திலிருந்து தனது பிரத்யேகப் பிரச்சார வேனில் பயணத்தைத் தொடங்கிய அவர், விமான நிலைய வயர்லெஸ் சாலை, கே.கே.நகர், காஜாமலை மற்றும் கொட்டப்பட்டு ஆகிய இடங்களில் வலம் வந்தார். வேனின் மீது நின்றபடி தனது கட்சியின் 'விசில்' சின்னத்தை நினைவுபடுத்தும் வகையில் விசில் அடித்தும், கையசைத்தும் உற்சாகமாக மக்களைச் சந்தித்தார். வழிநெடுகிலும் திரண்டிருந்த தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சர்வ சமய வழிபாடும் முக்கிய சந்திப்புகளும்
தனது பிரச்சாரத்தின் போது ஆன்மிகத் தலங்களுக்குச் சென்ற விஜய், அங்குச் சிறப்பான வழிபாடுகளை மேற்கொண்டார். வயர்லெஸ் சாலையில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்திற்குச் சென்ற அவர், தரையில் மண்டியிட்டுச் சிறிது தூரம் சென்று உருக்கமாக ஜெபம் செய்தார். பின்னர், கே.கே.நகர் பகுதியில் உள்ள நூருல் ஹுதா பள்ளிவாசலுக்குச் சென்று அதன் தலைவர் மோத்தி ஹாஜியாரைச் சந்தித்துத் தனக்கு ஆதரவு கோரினார். தொடர்ந்து திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பச்சநாச்சியம்மன் கோயிலுக்குச் சென்ற விஜய், அங்குத் தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். அவருக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் விபூதி மற்றும் குங்குமப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, வேனில் முன்னாள் அமைச்சரும் லால்குடி தொகுதி தவெக வேட்பாளருமான கு.ப.கிருஷ்ணனை உடன் அழைத்துச் சென்று விஜய் ஆதரவு திரட்டினார். சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த ரோடு ஷோவில் விஜய் எங்கும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எடப்பாடி தொகுதியில் சுயேச்சைக்கு ஆதரவு
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அருண்குமாரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால், அங்குத் தவெக போட்டியிட முடியாத சூழல் உருவானது. இதனைத் தொடர்ந்து, அந்தத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகக் களம் இறங்கியுள்ள தவெக-வின் முன்னாள் நிர்வாகி பிரேம்குமாருக்குத் தனது ஆதரவை விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தவெக சார்பில் பிரேம்குமாரை ஒருமனதாக ஆதரிக்க முடிவு செய்துள்ளதாகவும், அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள 'தொலைக்காட்சிப் பெட்டி' சின்னத்திற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
