“விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்திற்குப் பேரழிவு!” - போலி கடித விவகாரத்தில் டிடிவி தினகரன் காட்டம்

ஆதரவு கடித விவகாரத்தில் தவெகவினர் போலி வீடியோ மற்றும் ஆவணங்களைப் பயன்படுத்தி மோசடி செய்வதாகவும், விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்திற்குப் பேரழிவு ஏற்படும் என்றும் டிடிவி தினகரன் சாடியுள்ளார்.

M

எழுதியவர்

3 மணி நேரத்திற்கு முன்
“விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்திற்குப் பேரழிவு!” - போலி கடித விவகாரத்தில் டிடிவி தினகரன் காட்டம்

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தமிழக வெற்றிக் கழகத்தின் மீது மிகக்கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தவெக சார்பில் வெளியிடப்பட்ட எம்எல்ஏ காமராஜ் கையெழுத்திடும் வீடியோ எங்கே, யாரால் எடுக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பிய அவர், அது ஏஐ (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலியான வீடியோவாக இருக்கலாம் எனச் சந்தேகம் கிளப்பினார். ஆளுநரிடம் ஆதரவு கடிதத்தின் நகலை வழங்கியபோது அசல் கடிதத்தைக் கேட்டதற்கு, தவெகவினர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்து விட்டு வந்துள்ளதாக அவர் சாடினார்.

மோசடி மற்றும் மிரட்டல் அரசியல்

ஊழலை ஒழிப்போம் என்று முழக்கமிடுபவர்கள், ஆட்சிக்கு வரும் முன்பே முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக இத்தகைய ‘ஃபோர்ஜரி’ வேலைகளில் ஈடுபடுவதாக தினகரன் விமர்சித்தார். தனது ஒப்புதலுடன் கடிதம் கொடுக்கப்பட்டதாகக் கூறி குழப்பத்தை விளைவிப்பதன் மூலம் தன்னை மிரட்டப் பார்ப்பதாகவும், ஆனால் தான் எத்தனையோ நெருக்கடிகளைச் சந்தித்தவன் என்பதால் இதற்கு அஞ்சப்போவதில்லை என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார். இந்த போலி ஆதரவு கடித விவகாரத்தை சட்டரீதியாகச் சும்மா விடப்போவதில்லை என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

அழிவு சக்தியாக உருவெடுக்கும் தவெக

திமுக-வை ‘தீய சக்தி’ என்று குறிப்பிட்ட தினகரன், தற்போது தவெக தமிழ்நாட்டை அழிக்க வந்த ‘அழிவு சக்தியாக’ உருவெடுத்துள்ளதாகச் சாடினார். ஒரே ஒரு எம்எல்ஏ தானே என்கிற திமிரிலும், அகங்காரத்திலும் தவெகவினர் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகவும், மிரட்டல் அரசியலை முன்னெடுப்பதாகவும் அவர் கூறினார். ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கவே இத்தனை மோசடிகளைச் செய்யும் விஜய் தலைமையிலான ஆட்சி அமைந்தால், அது தமிழகத்திற்குப் பெரும் பேரழிவையே ஏற்படுத்தும் என்று அவர் தனது பேட்டியில் ஆவேசமாகத் தெரிவித்தார்.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...