தமிழக சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், திருச்சி மேற்குத் தொகுதியில் அமைச்சரும் திமுகவின் முக்கியப் புள்ளியுமான கே.என்.நேரு முதல் சுற்றிலேயே பின்னடைவைச் சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல் சுற்று முடிவில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் ராமமூர்த்தி 9,105 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அவரைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் கே.என்.நேரு 8,523 வாக்குகளும், அமமுக வேட்பாளர் ராஜசேகரன் 432 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன் அடிப்படையில், தவெக வேட்பாளர் ராமமூர்த்தி 864 வாக்குகள் வித்தியாசத்தில் அமைச்சர் கே.என்.நேருவை விட முந்திச் செல்கிறார். முன்னதாக, ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற இந்தத் தேர்தலில் தமிழகம் முழுவதும் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இம்முறை திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தவெக என நான்கு முனைப் போட்டி நிலவியது.
கூட்டணிகளும் தொகுதிப் பங்கீடுகளும்
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றன. இந்தக் கூட்டணியில் திமுக 164 இடங்களிலும், காங்கிரஸ் 28, தேமுதிக 10, விசிக 8 இடங்களிலும் போட்டியிட்டன. மேலும் சிபிஎம் (5), சிபிஐ (5), மதிமுக (4) மற்றும் இதர சிறிய கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. மறுபுறம், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் களம் கண்டன. அதிமுக 166 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிட்ட நிலையில், பாஜக 26, பாமக 18, அமமுக 11 மற்றும் தமாகா 4 இடங்களிலும் களம் இறங்கின. நாதக மற்றும் தவெக ஆகிய கட்சிகள் எவ்விதக் கூட்டணியும் இன்றி தனித்துத் தேர்தல் களத்தைச் சந்தித்தன. தற்போது வெளியாகியுள்ள திருச்சி மேற்குத் தொகுதி நிலவரம், தனித்து களம் கண்ட தவெக-வின் செல்வாக்கைக் காட்டுவதாக அமைந்துள்ளது.
