தமிழக சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் தொங்கு சட்டமன்றம் அமையும் என்ற பேச்சு கடந்த சில நாட்களாகவே எழுந்து வருகிறது. அது என்ன தொங்கு சட்டமன்றம் என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. அதனைப் பற்றிக் காணலாம்.
தமிழ்நாடு சட்டமன்ற நிலவரம்
தமிழ்நாடு சட்டமன்றம் 234 தொகுதிகளைக் கொண்டது. இந்த பிரதிநிதிகள் தான் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் போடுபவர்களாக இருக்கிறார்கள். ஒவ்வொரு தேர்தலில் தங்கள் தொகுதியில் யார் ஜெயித்து என்ன செய்யப் போகிறார்கள் என மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். இப்படியான நிலையில் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக தலைமையிலான கூட்டணி அமைந்தது. நாம் தமிழர், முதல்முறையாக களம் கண்ட தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிட்டது.
யாருக்கு பெரும்பான்மை கிடைக்கும்?
கடந்த ஏப்ரல் 29ம் தேதி வெளியாகிய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சியமைக்கும் என தெரிவித்துள்ளது. ஆனால் விஜயின் வருகையால் பிரியும் வாக்குகளால் திமுக கூட்டணியே 125-145 வரை மட்டுமே ஜெயிக்கும் என சொல்லப்பட்டுள்ளது. அதிமுக எதிர்க்கட்சியாக வரும் என சொல்லப்பட்டுள்ள நிலையில் தவெக 15-25 தொகுதிகள் வரை ஜெயிக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்க வேண்டுமென்றால் 118 இடங்களில் ஒரு கட்சி ஜெயிக்க வேண்டும். கிடைக்காத பட்சத்தில் கூட்டணி ஆட்சியோ அல்லது பிற கட்சிகளின் தயவுடன் ஒரு கட்சியோ ஆட்சியமைத்து பெரும்பான்மையை நிரூபிக்க முடியும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கூட்டணி ஆட்சி என்ற ஒன்று இதுவரை இருந்தது இல்லை. ஒரு கட்சியே மற்ற கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்திருக்கிறது.
தொங்கு சட்டமன்றம்
தொங்கு சட்டமன்றம் என்பது ஒரு கட்சிக்கு மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததை குறிப்பதாகும். இத்தகைய சூழலில் அந்த தேர்தலில் அதிக இடங்களைப் பிடித்த கட்சியை ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பார். அல்லது கூட்டணி அமைத்து பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை வைத்திருக்கும் கட்சியை அழைக்கலாம். யாராக இருந்தாலும் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தால் மட்டுமே அதிகாரத்தில் அமர முடியும்.
தொங்கு சட்டமன்றம் என்பது நிலையானது அல்ல. அது எப்போது வேண்டுமானாலும் ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுக்கலாம். இருக்கும் ஆட்சியை கலைக்கலாம். உதாரணமாக 2018ல் நடந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலை குறிப்பிடலாம். அந்த தேர்தலில் பி.ஜே.பி, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என மும்முனைப் போட்டி நிலவியது.
இதில் 224 தொகுதிகளில் பாஜக 104 தொகுதிகள் வென்றது. இருந்தாலும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதேசமயம் பாஜகவை வீழ்த்த 80 தொகுதிகள் வென்ற காங்கிரஸ் 37 தொகுதிகள் வென்ற குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்தது. இதனால் குமாரசாமி முதலமைச்சரானார். ஆனால் அதற்கு முன்பாக அதிக இடங்கள் வென்ற பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தார். முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்ற நிலையில் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க தவறியதால் 3 நாட்களில் முதலமைச்சர் பதவியை இழந்தார். குமாரசாமி முதலமைச்சராகி ஓராண்டு பதவி வகித்த நிலையில் அவரையும் அந்த பதவியில் இருந்து சூழ்ச்சியால் விலக வைத்தனர்.
ஏற்கனவே தமிழ்நாட்டில் தேர்தல் அறிவிப்புக்கு முன் திமுக கூட்டணியில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற குரல் ஒலித்தது. இந்த நிலையில் ஒருவேளை திமுக வென்றும் பெரும்பான்மை பெறவில்லை என்றால் எதிர்பாராத ட்விஸ்ட்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மற்ற கட்சிகளுக்கும் பொருந்தும் என்பதால் அனைத்து கட்சிகளும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
