தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல், கடந்த மாதம் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்றது. இதனை தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை நேற்றைய முன்தினம் பல்வேறு ஊடக நிறுவனங்களும் வெளியிட்டது. மீண்டும் திமுகவே ஆட்சி அமைக்கும் என்று பெரும்பான்மையான கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளது. ஆனால் ஆக்ஸிஸ் மை இந்தியா (Axis My India) என்ற நிறுவனம் மட்டும் தவெக 190 இடங்களை வென்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்த கருத்து கணிப்பால் தவெகவினர் உற்சாகத்தில் உள்ளனர். ஆனால் இந்த கருத்து கணிப்பு எந்த அளவு உறுதியானது என்பது குறித்து மூத்த பத்திகையாளர் துக்ளக் இதயா நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
ஜோசியமும் தேர்தல் கருத்து கணிப்பும்
"பொதுவாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு என்பது பல்வேறு விதமாக அமையும். சில கட்சிகள், குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு பணம் கொடுத்து திட்டமிட்டு முடிவுகளை வெளியிட செய்யும். சில நிறுவனங்கள், குறிப்பிட்ட கட்சிகளின் ஆதரவை தொடர்ந்து பெற வேண்டும் என்பதற்காகவும் அவர்களுடன் நல்லுறவை பேண வேண்டும் என்பதற்காகவும் அவர்கள் விரும்பும் கட்சிக்கு ஆதரவாக கருத்து கணிப்புகளை சில நிறுவனங்கள் வெளியிடும். ஆனால் சில நிறுவனங்கள் நியாயமான முறையில் கருத்து கணிப்புகளை வெளியிடும். ஆனாலும் நியாயமான முறையில் வெளியிடப்படுவதில் கூட பலவிதமான முடிவுகள் வருகிறது. ஒரே கிரக நிலை, ஒரே ஜாதகம், ஒரே மனிதனுக்கு நான்கு ஜோசியர்கள் நான்கு விதமான பலன்களை தெரிவிப்பது போல தான் இந்த நியாயமான கருத்து கணிப்புகளும்" என்று துக்ளக் இதயா தெரிவித்தார்.
எல்லா பக்கமும் திமுக அலை
இதனை தொடர்ந்து பேசிய அவர், "சில வடநாட்டு ஊடகங்கள் மேலோட்டமாக மிக குறைந்த எண்ணிக்கையில் கணக்கெடுப்பு செய்து விட்டு அது தான் முடிவு என்று வெளியிடுகிறது. ஆனால் அது அல்ல எதார்த்தம். 234 தொகுதிகளுக்கும் செல்லவில்லை என்றாலும், குறிப்பிட்ட சில முக்கிய தொகுதிகளை தேர்தெடுத்து மண்டங்களாக பிரித்து, அந்த தொகுதி மக்களின் மனநிலை, சமூக நிலை அடிப்படையில் கணக்கெடுக்க வேண்டும். கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து, இப்பொழுது தேர்தலுக்கு பின்பு வரை 6 மண்டலங்களில் பல்வேறு விதமான கருத்து கணிப்புகளை எடுத்து உள்ளோம். அதில் எந்த மாற்றமும் இல்லாமல் திமுகவிற்கே சாதகமாக உள்ளது. டெல்டா, கொங்கு, சென்னை, மத்தி, தெற்கு, வடக்கு என எல்லா மண்டலத்திலும் திமுக அலை தான் வீசுகிறது.எனினும் மே 4 அன்று தான் உண்மையான முடிவு தெரிய வரும்" என்று தெரிவித்தார்.
