தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல், கடந்த மாதம் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்றது. இதனை தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை நேற்றைய முன்தினம் பல்வேறு ஊடக நிறுவனங்களும் வெளியிட்டது. இதில் பெரும்பாலான நிறுவனங்கள் திமுகவிற்கு சாதகமாகவும் ஓரிரு நிறுவனங்கள் அதிமுகவிற்கு சாதமாகவும் ஆக்ஸிஸ் மை இந்தியா (Axis My India) என்ற நிறுவனம் தவெகவிற்கு சாதகமாகவும் முடிவுகளை வெளியிட்டது. ஆனால் எந்த நிறுவனமும் பெரிதாக நாம் தமிழர் கட்சியை முன்னிலை படுத்தவே இல்லை. மேலும் நாதக-வை குறிப்பிடாமல் மற்றவை என்றே குறிப்பிட்டுள்ளனர். இது இணையத்தில் பேசு பொருளானது. சீமானின் வெற்றி குறித்தும் அரசியல் நிலைபாடு குறித்தும் மூத்த பத்திகையாளர் துக்ளக் இதயா நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
விஜய்யின் சினிமா மோகமும் திராவிடக் கொள்கையும்
"இன்று மாற்று வேண்டும் என்று கூறி தவெகவிற்கு வாக்கு செலுத்தியவர்கள் எல்லாரும் விஜயின் ரசிகர்கள் தான். ரசிகர் மனநிலையில் இருந்து தவெகவிற்கு வாக்கு செலுத்தி விட்டு அதை வெளியில் கூற வெட்கபட்டுக் கொண்டு மாற்றம் என்று கூறி வருகின்றனர். அவர்களுக்கு உண்மையில் மாற்றம் தான் உண்மையான தேவை என்றால் சீமான் வருகைக்கு பின் அவர் பின்னால் சென்று இருக்க வேண்டும். இல்லையென்றால் கமல் ஹாசன், விஜயகாந்த், டிடிவி தினகரன் இவர்கள் பின்னால் சென்று இருக்க வேண்டும். யாரும் மாற்றம் தேடி அவர்கள் பின்னால் போகவில்லை. விஜய் எந்தவிதமான தத்துவத்தையே மாற்றத்தையோ சொல்லவில்லை." என்று தெரிவித்தார்.
மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில், "திராவிட கலாச்சாரத்தை அப்படியே பின்பற்றுகிறார். கலைஞரை தவிர அண்ணா, பெரியார், எம்.ஜி.ஆர். ஜெயலிலதா என எல்லாரையும் ஏற்றுக் கொள்கிறார். மும்மொழி கொள்கை எதிர்ப்பு, நீட் தேர்வு எதிர்ப்பு என முழுவதும் திராவிட கொள்கைகளை பின்பற்றுகிறார். வேறு ஒரு புதிய மாற்றத்திற்கான சித்தாந்தத்தை கூறவில்லை. தேர்தல் அறிக்கைகளில் கூட சீமான் போல எந்தவிதமான மாற்று வாக்குறுதிகளை அறிவிக்கவில்லை. அப்படியே திராவிட கட்சிகளின் அறிக்கைகளை மாற்றங்கள் செய்து அறிவித்துள்ளார்." என்று அவர் கூறினார்.
மொழி அரசியலும் சீமானின் சவால்களும்
சீமான் ஒரு கனவோடு அரசியலுக்கு வந்துள்ளார். மாற்றங்களுக்கான வழிமுறைகளை அவர் தெளிவுபடுத்தினாலும் அவர் பின்னால் செல்ல மக்கள் தயாராக இல்லை. நல்லதை விட கெட்டது மிக விரைவாக சென்றடையும். அதை போல, தவெகவிற்கு இவ்வளவு பெரிய ஆதரவு கிடைத்ததற்கு காரணம் சினிமா மோகம் தான். இது போல ஆதரவு சீமானுக்கு கிடைப்பது கடினம். ஆனால் சீமானின் தொண்டர்கள், சித்தாந்த ரீதியாக அரசியல்படுத்தப்பட்டவர்கள். எனவே அவர்களின் வாக்கு மாறி செல்லாது. ஆனால் தெரிந்தோ தெரியாமலோ சீமான் சில பிரிவினரை பகைத்துக் கொண்டார். இலங்கை பிரச்சனை மற்றும் தமிழ் உணர்வை வைத்து மட்டும் தமிழ்நாட்டில் வாக்கு வாங்குவது அவ்வளவு எளிது அல்ல. பாஜகவால் மதத்தை வைத்து கூட தமிழ்நாட்டில் வாக்கு பெற முடியவில்லை. பழ.நெடுமாறன், வைகோ, தொல்.திருமாவளவன் உள்பட பலரும் விடுதலை புலிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் யாருமே பெரிதாக வெற்றி பெறவில்லை. அதே போல, மொழி உணர்வை மக்கள் ஏற்க தயாராக இல்லை. எம்.ஜி.ஆரை மலையாளி என்று கூறியபோதும் மக்கள் அவரை தான் தேர்ந்தெத்தார்கள், அதேபோல கலைஞரை தெலுங்கர் என்றும் ஜெயலலிதாவை கன்னடத்தவர் என்றும் கூறியபோதும் மக்கள் அவர்களை ஆதரிக்க தான் செய்தார்கள். எனவே மொழி பிரச்சனையை மக்கள் ஏற்க தயாராக இல்லை. எனவே மக்கள் ஏற்க தயாராக இல்லாத விஷயத்தை கொண்டு சீமான் மாற்ற நினைக்கிறார். அது தமிழ்நாட்டில் எடுபடாது. விஜய்யின் வருகையால் சீமானின் வாக்கு வங்கி நிச்சயம் குறைய வாய்ப்புள்ளது" என அவர் தெரிவித்தார்.
