சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று 234 தொகுதிகளுக்கான பட்டியலை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் என்பது நான்கு முனைப் போட்டி அல்ல என்றும், மக்கள் விரோத திமுக கூட்டணிக்கும் மக்கள் ஆதரவு பெற்ற தவெக-விற்கும் இடையிலான இருமுனைப் போட்டி மட்டுமே என்றும் அதிரடியாகத் தெரிவித்தார். குறிப்பாக, பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் தாம் போட்டியிடப் போவதாக அறிவித்த விஜய், தி.நகரில் புஸ்ஸி ஆனந்த், மயிலாப்பூரில் வெங்கட்ரமணன், வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனா, கோபிசெட்டிப்பாளையத்தில் செங்கோட்டையன், திருச்செங்கோட்டில் அருண்ராஜ், திருப்பரங்குன்றத்தில் நிர்மல்குமார், எழும்பூர் தொகுதியில் ராஜ்மோகன், ஆர்.கே.நகரில் மரிய வில்சன் மற்றும் குமாரபாளையத்தில் விஜயலெட்சுமி உள்ளிட்ட வேட்பாளர்களை மக்களுக்கான காப்பாளர்களாக அறிமுகப்படுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஊழல் செய்யாத மற்றும் அதிகார வர்க்கத்திற்கு அடிமையாக இல்லாத சாமானிய பின்புலத்தைக் கொண்டவர்களையே வேட்பாளர்களாகக் களமிறக்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். இளைஞர்களுக்காகப் பல்வேறு அதிரடி வாக்குறுதிகளை அளித்த விஜய், போதைப்பொருள் இல்லாத மாநிலத்தை உருவாக்குதல், கல்லூரி படிப்பிற்கு 20 லட்சம் ரூபாய் மற்றும் தொழில் தொடங்க 25 லட்சம் ரூபாய் பிணையில்லா கடன் வழங்குதல் போன்ற திட்டங்களை அறிவித்தார். மேலும், வேலைவாய்ப்பு தாமதமானால் பட்டதாரிகளுக்கு மாதம் 4,000 ரூபாயும், டிப்ளமோ படித்தோருக்கு 2,500 ரூபாயும் உதவித்தொகை வழங்கப்படும் என்றும், தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 75 சதவீத வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களுக்கு மானியம் அளிக்கப்படும் என்றும் உறுதியளித்தார். இந்தத் தேர்தல் மன்னராட்சியில் இருந்து மக்களாட்சியை மீட்பதற்கான தேர்தல் என்று குறிப்பிட்ட அவர், மக்கள் அனைவரும் 'விசில்' சின்னத்திற்கு வாக்களித்துத் தவெக-வை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
