தமிழ்நாட்டில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் அதன் பின்னணியில் மிகப்பெரிய அரசியல் திருப்பங்கள் இருந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டணி கட்சிகளின் ஆதரவை நாடிய விஜய்
சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து ஆட்சி அமைக்க அழைக்குமாறு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்து கடிதம் வழங்கினார். மேலும் சட்டமன்றத்தில் இரண்டு வாரங்களில் பெரும்பான்மையை நிரூபிக்கிறேன் எனவும் கால அவகாசம் கேட்டிருந்தார்.
அதற்கு முன்பாக பெரும்பான்மையை நிரூபிக்க 11 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவைப்பட்ட நிலையில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் உதவியை நாடினார்.
ஆளுநருக்கு கொடுக்கப்பட்ட கடிதத்தால் சிக்கல்
இதில் முதல் ஆளாக காங்கிரஸ் கட்சி தனது 5 சட்டமன்ற உறுப்பினர்களை விஜய்க்கு ஆதரவாக கொடுத்தது. இதனையடுத்து விஜய் ஆளுநரிடம் வழங்கிய கடிதத்தில் கூட்டணி ஆட்சி என குறிப்பிட்டதால் 118 எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதம் இருந்தால்தான் ஆட்சி அமைக்க அழைக்க முடியும் என ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.
இதனைத் தொடர்ந்து நீண்ட ஆலோசனைக்குப் பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தங்களது ஆதரவை தமிழக வெற்றிக் கழகத்திற்கு தெரிவித்தது. மேலும் காங்கிரஸ் ஆட்சியில் பங்கு கொள்ளும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் வெளியிலிருந்து ஆதரவு தருவதாக தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்திற்கு நேரில் சென்று விஜய் நன்றி தெரிவித்தார்.
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நீண்ட ஆலோசனைக்கு பின்னர் தனது ஆதரவை விஜய்க்கு தெரிவித்துள்ளார். ஆனால் அவரும் வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கிறோம் என விளக்கமளித்துள்ளார்.
வன்னி அரசு போட்ட ட்வீட்டால் சர்ச்சை
இதனிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு நேற்று இரவு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார் அதில், “ஆட்சியிலும் பங்கு.. அதிகாரத்திலும் பங்கு.. இனி திருமா காலம்... இனி உயர்வோம் மேலும் மேலும்” என தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று காலை வெளியான பதிவில், “எம்மை ஓரங்கட்ட நினைத்தாலும் ஒதுக்க நினைத்தாலும் நாங்களே மையம் என்பதை தீர்மானிப்போம்” என்பதை திருமாவளவன் புகைப்படத்தோடு பதிவிட்டிருந்தார்.
அதனால் ஆட்சி அதிகாரத்தில் திருமாவளவன் பங்கேற்கிறாரா என்ற கேள்வி எழுந்தது. அதேசமயம் அவர் துணை முதலமைச்சர் பதவி மற்றும் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் ஒரு தொகுதி ராஜினாமா செய்யும் பட்சத்தில் அந்த இடத்தில் போட்டி போன்ற நிபந்தனைகளை விதித்ததாகவும் தகவல் வெளியானது. இதனால் சமூக வலைதளங்கள் முழுக்க திருமாவளவனை விமர்சித்து பதிவுகள் வெளியாக தொடங்கியது.
திருமாவளவனுக்கு அழுத்தமா?
விஜய் தேர்தலுக்கு முன்பாகவே ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதை அறிவித்து திருமாவளவனை கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் திருமாவளவன் அதனை நிராகரித்து திமுக கூட்டணியில் தொடர்வதாக அறிவித்தார். இது விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்களிடையே சற்று அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் திருமாவளவன் ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுக்க வேண்டும் என அக்கட்சி தொண்டர்கள் விரும்பியிருந்தனர். அதற்கேற்ப அரசியல் களமும் தேர்தலுக்குப் பின் விஜய்க்கு ஆதரவு கொடுக்க வேண்டிய சூழலை திருமாவளவனுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது.
இதனால் அவரும் ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுக்க முடிவெடுத்து விட்டார் என வன்னி அரசு போட்ட பதிவு மூலம் பலரும் நம்பியிருந்தனர். ஆனால் இன்று மாலையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்த திருமாவளவன், “தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்து விடக்கூடாது. என்னுடைய முடிவு அவர் தலைமையிலான புதிய அரசு அமைவதற்கு தடையாக இருந்து விடக் கூடாது” என்பதால் ஆதரவு கொடுப்பதாக தெரிவித்தார்.
அதே சமயம் திமுக கூட்டணியில் தான் நாங்கள் இருக்கிறோம். அவர்களுடனான உறவில் எந்த சிக்கலும் இல்லை என்பதையும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். காரணம் திருமாவளவன் காலை 11 மணிக்கு செய்தியாளர்களை சந்திப்பார் என தெரிவிக்கப்பட்ட நிலையில் பொழுது விடிந்ததுமே அவரது கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் குவிய ஆரம்பித்தனர். விஜய்யும் திருமாவளவன் ஆதரவு தெரிவித்த உடன் நேராக விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகம் செல்ல உள்ளார் என்ற தகவலும் வெளியானதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
ஆனால் மாலை 4 மணிக்கு மேல் தான் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். இதனால் இந்த கால தாமதமான நேரத்தில் திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் மற்றும் இணையவாசிகள் பலரின் ஆதங்கமாக உள்ளது. திமுக, அதிமுக ஒரு பேச்சுக்கு கூட கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு என்ற சொல்லை கூட முன்னெடுக்கவில்லை. ஆனால் தவெக அவர்களாகவே அறிவித்தும் கிடைக்கும் வாய்ப்பை கூட திருமாவளவன் பயன்படுத்தியிருந்தால் இன்னும் அரசியல் களம் சூடுபிடித்திருக்கும் என பலரும் தெரிவித்துள்ளனர்.
