தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுத் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வரும் நிலையில், அவரது அரசியல் நிலைப்பாடு குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கடலூர் பரப்புரை ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து விஜய் இன்று திருப்பூரில் வாக்குச் சேகரிக்க உள்ள நிலையில், அவர் திமுகவை எதிர்ப்பதன் பின்னணியில் ஒரு மறைமுகத் திட்டம் இருப்பதாகத் திருமாவளவன் சாடியுள்ளார். பாஜக தமிழகத்தில் கால் ஊன்றிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் விசிக, திமுக கூட்டணியில் நீடிப்பது குறித்துத் தெளிவான விளக்கங்களை அளித்து வரும் வேளையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஏன் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எனத் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், இந்தத் தேர்தலைத் தமிழ்நாட்டு மக்களுக்கும் சங்பரிவார் சக்திகளுக்கும் இடையிலான மக்கள் யுத்தமாகவே தாங்கள் பார்ப்பதாகத் தெரிவித்தார். இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று விஜய்யால் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது என்பது அவருக்கே தெரிந்திருந்தும், திமுக எதிர்ப்பு என்ற பெயரில் அவர் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் அதிமுக - பாஜக கூட்டணிக்குச் சாதகமாகவே அமையும் எனத் திருமாவளவன் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் தமிழகத்தில் என்டிஏ கூட்டணி அதிகாரத்திற்கு வர விஜய் வழிவகை செய்கிறார் என்பது தங்களின் யூகம் என்றும், அவரது உண்மையான அரசியலை மக்கள் முன்னிலையில் அம்பலப்படுத்துவதே தங்களின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
மறுபுறம், கட்சித் தொடங்கியது முதல் திமுகவையே தனது பிரதான எதிரியாகச் சித்தரித்து வரும் விஜய், அதிமுகவை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. களத்தில் இல்லாத கட்சியைப் பற்றி ஏன் பேச வேண்டும் என அவரது கட்சியினர் கேள்வி எழுப்பி வரும் சூழலில், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவின் கருத்து விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஒருவேளை விஜய் வெற்றி பெற்றால், என்டிஏ ஆட்சி அமைக்க அவரது ஆதரவைக் கோருவோம் என அத்வாலே தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்குத் தவெக தரப்பிலிருந்து பெரிய அளவில் எதிர்ப்புகள் கிளம்பாதது, திருமாவளவனின் குற்றச்சாட்டுகளுக்கு வலுசேர்ப்பது போல அமைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
