தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கியத் தலைவர்கள் பலரும் பின்னடைவைச் சந்தித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தங்களது தொகுதிகளில் பின் தங்கியுள்ளனர். இவர்களுக்கு எதிராகக் களம் கண்ட தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் முன்னிலை பெற்று வருகின்றனர்.
இவர்களைத் தவிர, அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பி.கே. சேகர்பாபு, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், த.மோ. அன்பரசன், மா.சுப்பிரமணியன், கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் சபாநாயகர் அப்பாவு ஆகியோரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். இந்தத் தொகுதிகள் அனைத்திலும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
தேர்தல் கள நிலவரம் மற்றும் கூட்டணிகள்
முன்னதாக வெளியான பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் திமுக கூட்டணியே மீண்டும் வெற்றி பெறும் எனக் கணித்திருந்த நிலையில், அதற்கு மாறாகத் தமிழக வெற்றிக் கழகம் பல தொகுதிகளில் முன்னிலை பெற்று ஆளும் கட்சிக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. தற்போதைய அதிகாரப்பூர்வ நிலவரப்படி, தமிழக வெற்றிக் கழகம் 98 தொகுதிகளிலும், அதிமுக 64 தொகுதிகளிலும், திமுக 51 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற இந்தத் தேர்தலில், மாநிலம் முழுவதும் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
இந்த முறை தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவியது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்ற நிலையில், திமுக 164 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிட்டது. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் களம் கண்டன. தனித்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் இந்தத் திடீர் முன்னேற்றம் தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றத்திற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.
