தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்களைப் பொருத்தும் பணி ஏப்ரல் 16-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாகத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியத் தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ள 'மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மேலாண்மை முறை' (EMS) மென்பொருள் வாயிலாக, வாக்குச்சாவடி வாரியாக இயந்திரங்கள் மற்றும் விவிபேட் (VVPAT) கருவிகள் சம வாய்ப்பு முறையில் (Randomization) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் கட்டப் பணிகள்
தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு காகிதத் தணிக்கை கருவிகள் (VVPAT) இரண்டாம் நிலை சம வாய்ப்பு முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ஏப்ரல் 11 முதல் 14-ஆம் தேதி வரை இந்த இரண்டாம் நிலை ஒதுக்கீட்டுச் செயல்முறை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.
சின்னங்கள் பதிவேற்றம்
அதன் தொடர்ச்சியாக, நாளை (ஏப்ரல் 16) முதல் இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர்கள், வரிசை எண்கள் மற்றும் சின்னங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு, சீல் வைக்கப்படும் பணிகள் தொடங்க உள்ளன. இந்தப் பணிகள் அனைத்தும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது அவர்களது அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் முன்னிலையிலேயே நடைபெறும்.
வெளிப்படையான நடைமுறை
வாக்குச்சாவடி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட EVM மற்றும் VVPAT கருவிகளின் இறுதிப் பட்டியல்கள் அனைத்து வேட்பாளர்களுக்கும் முறையாகப் பகிரப்படும். வாக்குப்பதிவு நாளன்று, இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்டுச் சரிபார்க்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் உறுதிப்படத் தெரிவித்துள்ளது.
