தமிழகத்தில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியின் ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்ததை அடுத்து, கடந்த மார்ச் 15-ஆம் தேதி தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தேர்தல் தேதியை அறிவித்தது. தமிழகத்துடன் சேர்த்து புதுச்சேரி, கேரளம், அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கும் தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டது. அறிவிப்பு வருவதற்கு முன்பே தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கின. மக்களைக் கவரும் வகையில் கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் அடுக்கடுக்காக வெளியிடப்பட்டதால் அரசியல் களம் மிகப்பெரிய அளவில் சூடுபிடித்தது. கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவியது. சுமார் 40 நாட்களாக நடைபெற்ற அனல் பறக்கும் பிரச்சாரங்களுக்கு இடையே, பல்வேறு அமைப்புகள் தங்களது கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வந்தன. அதே வேளையில், தங்களுக்குத்தான் வெற்றி என ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் மிகுந்த நம்பிக்கையுடன் கருத்து தெரிவித்து வந்தனர்.
வாக்கு எண்ணிக்கை நிலவரம்
தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடந்து முடிந்த தேர்தலில் பதிவான வாக்கு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இன்று திங்கள்கிழமை (மே 4) காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து 8:30 மணி முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள வாக்குகள் எண்ணப்பட்டு, தொகுதி வாரியான முன்னிலை நிலவரங்கள் வெளியாக உள்ளன. இந்த எண்ணிக்கை பணிகள் இரவு வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் அடுத்த ஐந்தாண்டு கால ஆட்சியைத் தீர்மானிக்கப்போகும் இந்தத் தேர்தல் முடிவுகள், ஒவ்வொரு கட்சியின் வெற்றி மற்றும் வாக்கு சதவீதத்தைத் தெளிவாகத் தெரியப்படுத்தும். தமிழகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று அதிகாரப்பூர்வமாகத் தெரியவருவதால், ஆட்சி அதிகாரம் யாருடைய கைக்குச் செல்லும் என்பது இன்று இரவுக்குள் உறுதியாகிவிடும்.
