தமிழகத்தில் 2026-ம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள சூழலில், இந்தத் தேர்தல் மாநில அரசியலில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி எனப் பலமுனைப் போட்டிகள் நிலவுவதால், மக்களின் தீர்ப்பு யாருக்குச் சாதகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், வாக்காளர்களின் மனவோட்டத்தைப் பிரதிபலிக்கும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை (Exit Poll) இன்று மாலை வெளியிடத் தேர்தல் ஆணையம் பச்சைக் கொடி காட்டியுள்ளது.
எக்ஸிட் போல் என்றால் என்ன?
தேர்தல் நாளன்று வாக்குச் செலுத்திவிட்டு வெளியே வரும் வாக்காளர்களிடம், அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்ற அடிப்படையில் திரட்டப்படும் புள்ளிவிவரங்களே எக்ஸிட் போல் எனப்படும். அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே, மாநிலத்தின் அடுத்த ஆட்சிக் கட்டிலில் அமரப்போவது யார் என்பதைத் தோராயமாகக் கணிப்பதற்கு இந்தத் தரவுகள் பெரிதும் உதவுகின்றன. பல்வேறு ஊடகங்கள் மற்றும் தனியார் ஆய்வு நிறுவனங்கள் இணைந்து இந்தத் தகவல்களைத் திரட்டித் தேர்தல் முடிவுகளுக்கு முன்னோட்டமாக வழங்குகின்றன.
வெளியாவதில் நிலவிய தாமதமும் தடையும
வழக்கமாக வாக்குப்பதிவு முடிந்த உடனேயே இக்கருத்துக்கணிப்புகள் வெளியிடப்படும். இருப்பினும், தமிழகம், கேரளம், புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெற்ற நிலையில், மேற்கு வங்கத்தின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுவதால் தேர்தல் ஆணையம் இதற்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது. பிற மாநில வாக்காளர்களின் முடிவுகள் மேற்கு வங்க வாக்குப்பதிவைப் பாதிக்கக் கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது அங்கு வாக்குப்பதிவு நிறைவடையும் தருவாயில் உள்ளதால், இன்று மாலை 6 மணிக்கு மேல் அனைத்து மாநிலங்களுக்குமான எக்ஸிட் போல் விவரங்களை வெளியிட அனுமதி கிடைத்துள்ளது.
